போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் விட ‘நோட்டா’ அதிக வாக்குகள் பெற்றால் யாருக்கு வெற்றி? கலெக்டரிடம் கல்லூரி மாணவி எழுப்பிய கேள்வி


போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் விட ‘நோட்டா’ அதிக வாக்குகள் பெற்றால் யாருக்கு வெற்றி? கலெக்டரிடம் கல்லூரி மாணவி எழுப்பிய கேள்வி
x
தினத்தந்தி 16 March 2019 9:30 PM GMT (Updated: 16 March 2019 10:32 PM GMT)

போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் விட ‘நோட்டா’ அதிக வாக்குகள் பெற்றால் யார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்? என்று தேர்தல் விழிப்புணர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் கல்லூரி மாணவி கேள்வி எழுப்பினார்.

சிவகாசி,

வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு கூட்டம், விருதுநகர் மாவட்டம் சிவகாசி எஸ்.எப்.ஆர். பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது. சிவகாசி ஆர்.டி.ஓ. தினகரன் தலைமை தாங்கினார். தாசில்தார் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். கல்லூரி பேராசிரியை விஜயகுமாரி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம், வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து மாணவிகள் மத்தியில் பேசினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகளிடம், வாக்களிப்பது குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள் என்று கூறினார். உடனே ஒரு மாணவி எழுந்து, “தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் விட நோட்டா அதிக வாக்கு பெற்றால், யார் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்?” என கேட்டார்.

இதற்கு பதில் அளித்த கலெக்டர் சிவஞானம், “கடந்த காலங்களில் பல தேர்தல்களில் நோட்டா என்ற ஒன்று இல்லாமல் இருந்தது. வாக்களிக்க வாக்குச்சாவடி வரை வந்த வாக்காளர், தனக்கு எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை என்று அரசுக்கு தெரியப்படுத்தவே நோட்டா என்ற சின்னம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 3 தேர்தல்களில் தான் இந்த நோட்டா நடை முறையில் உள்ளது.

இதற்கும் பலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். தற்போது வரை நோட்டாவுக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை மட்டும் வெளியிடப்படுகிறது. வருகிற காலங்களில் நோட்டா பரிணாம வளர்ச்சி பெற்று புதிய நடைமுறைகள் வரலாம். குறிப்பாக அனைத்து வேட்பாளர்களையும் விட நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் அதற்கு என்ன அர்த்தம்? மக்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பது குறித்து தேர்தல் ஆணையம் அறிவிக்கும்” என்று விளக்கம் அளித்தார்.

பின்னர் நிருபர்களிடம் கலெக்டர் சிவஞானம் கூறும்போது, நகர் பகுதியில் சுவர் விளம்பரம் செய்ய அனுமதி இல்லை.

கிராமப்புறங்களில் அனுமதி பெற்று சுவர் விளம்பரங்கள் செய்யலாம். அதே போல் மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த சிலைகளின் கீழ் கட்சி சார்புடைய வண்ணங்கள் இருந்தால் அதை மறைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

Next Story