பொள்ளாச்சி சம்பவம்: குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை வாங்கி தருவோம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி
பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை வாங்கி தருவோம் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.
சிவகங்கை,
சிவகங்கையை அடுத்துள்ள கொல்லங்குடியில் உள்ள வெட்டுடைய காளியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு சங்காபிசேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டார். அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜையும் செய்தார். அதன்பின்பு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சரியான வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பார்கள்.
மேலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வலுவான வெற்றி கூட்டணியாகும். மத்தியில் ஆட்சியை நிர்ணயிக்கும் கூட்டணி என்று கிராம மக்கள் வரை கூறுகின்றனர். காங்கிரஸ் கட்சி மக்கள் நலனில் அக்கறையில்லாத கட்சி. ஈழத்தமிழர்கள் சாவுக்கு காரணமாக இருந்தது காங்கிரசும், தி.மு.க.வும்தான். எனவே அந்த கூட்டணி மக்கள் மத்தியில் காணாமல் போய்விடும்.
தமிழக மக்கள் மீது அதிக அளவு அக்கறை உள்ளவர்கள் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் தான். பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை வாங்கி கொடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story