வாலாஜா தன்வந்திரி பீடத்தில் தவில், நாதஸ்வர கலைஞர்களுக்கு சான்றிதழ் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்
வாலாஜா தன்வந்திரி பீடத்தில் தவில், நாதஸ்வர கலைஞர்களுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
வாலாஜா,
வாலாஜாவை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், தன்வந்திரி பீடத்தின் 15-ம் ஆண்டு விழா, தன்வந்திரி பீடாதிபதி முரளிதர சுவாமிகளின் 58-வது ஜெயந்தி விழா மற்றும் 16 தெய்வீக திருக்கல்யாண விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் “மகா உத்சவம்” - 2019 என்ற பெயரில், கடந்த 13-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவையொட்டி 108 சுமங்கலி பூஜை, கோமாதா திருக்கல்யாணம், 108 கன்யா பூஜை, துளசிசெடி - நெல்லிசெடி திருக்கல்யாணம், 108 தம்பதிகள் பூஜை, அரச மரம் - வேப்பமரம் திருக்கல்யாணம் ஆகியவை நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று உலக நன்மைக்காக 1,008 கலச அபிஷேகத்துடன் திருமஞ்சனமும், 1000-க்கும் மேற்பட்ட தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்களின் நாத சங்கமம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு தன்வந்திரி பீடத்தில் கல்வெட்டை திறந்து வைத்து, சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர், தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்களை பாராட்டி சான்று வழங்கி பேசினார்.
இதில் கலெக்டர் எஸ்.ஏ.ராமன், அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அதைத் தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நேரத்தில் 16 தெய்வீக திருக்கல்யாணங்களும், மாலையில் தன்வந்திரி பீடாதிபதி முரளிதர சுவாமிகளின் 58-வது ஜெயந்தி விழாவும் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை தன்வந்திரி பீட நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story