காட்டுமன்னார்கோவில் அருகே இளம்பெண் பாலியல் பலாத்காரம் 5 பேர் கைது


காட்டுமன்னார்கோவில் அருகே இளம்பெண் பாலியல் பலாத்காரம் 5 பேர் கைது
x
தினத்தந்தி 17 March 2019 3:30 AM IST (Updated: 17 March 2019 4:03 AM IST)
t-max-icont-min-icon

காட்டுமன்னார் கோவில் அருகே இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சேத்தியாத்தோப்பு, 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது இளம் பெண். இவருக்கு சொந்தமாக கிராமத்திற்கு அருகே பூந்தோட்டம் உள்ளது. இங்கு இளம் பெண், பூக்களை பறிப்பதற்காக செல்வார். இந்த நிலையில் தற்போது அந்த பெண் 4 மாத கர்ப்பமாக இருந்தார். இதை கேட்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அந்த பெண்ணிடம், பெற்றோர் விசாரித்த போது, தோட்டத்திற்கு பூ வாங்குவது போன்று வந்த 5 பேர் கொண்ட கும்பல் தன்னை பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.

இதுபற்றி உடனடியாக சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆக்னிஷ்மேரி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்.

அதில், கீழகடம்பூரை சேர்ந்த வேல்முருகன்(வயது 30), விநாயகம் (60), ராமலிங்கம்(60), பாலு (50), மேலபூண்டி வீராசாமி(30) ஆகியோர் தனித்தனியாக பூ வாங்க செல்வது போன்று நடித்து இளம் பெண்ணை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வேல்முருகன் உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றி அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். இதற்கிடையே இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம் பெண், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் உரிய பரிசோதனைகளை செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Next Story