பொள்ளாச்சி கடைகளில் சோதனை: 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


பொள்ளாச்சி கடைகளில் சோதனை: 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 16 March 2019 9:45 PM GMT (Updated: 16 March 2019 10:34 PM GMT)

பொள்ளாச்சியில் கடைகளில் நடத்திய சோதனையில் 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பொள்ளாச்சி,

தமிழக அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. அதை தொடர்ந்து பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்படுத்துவதை தடுக்க நகராட்சி கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நகர்நல அலுவலர் மாணிக்கவேல்ராஜ் தலைமையில் கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது ஒரு சில கடைகளில் விற்பனை செய்வதற்கு பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து வாகனத்தில் கொண்டு சென்றனர். இந்த சோதனையில் சுகாதார ஆய்வாளர்கள் தர்மராஜ், மாரியப்பன், சீனிவாசன், விஜய் ஆனந்த், ஜெயபாரதி மற்றும் அலுவலர்கள் ஈடுபட்டனர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு மாற்றாக துணி பை, வாழை இலை, பாக்கு மட்டை தட்டு, காகித பை, பட்டர் சீட்டு மற்றும் மறுசுழற்சி செய்ய கூடிய பைகளை பயன்படுத்தலாம். கடை வீதி, சத்திரம் வீதி உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராத தொகையாக ரூ.24 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படும். தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவோர் மற்றும் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story