சி.எஸ்.எம்.டி. நடைமேம்பாலம் இடிந்து விபத்து: தந்தையை காப்பாற்றி தன்னுயிர் நீத்த மகன் உருக்கமான தகவல்கள்


சி.எஸ்.எம்.டி. நடைமேம்பாலம் இடிந்து விபத்து: தந்தையை காப்பாற்றி தன்னுயிர் நீத்த மகன் உருக்கமான தகவல்கள்
x
தினத்தந்தி 17 March 2019 5:05 AM IST (Updated: 17 March 2019 5:05 AM IST)
t-max-icont-min-icon

6 பேர் உயிரை பலிகொண்ட சி.எஸ்.எம்.டி. நடைமேம்பால விபத்தில் பலியான ஒருவர், தந்தையை காப்பாற்றிவிட்டு தனது உயிரை கொடுத்த உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை,

மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் கடந்த 14-ந்தேதி இரவு நடைமேம்பாலம் இடிந்து விழுந்து 6 பேரின் உயிரை பறித்தது. இந்த துயர சம்பவத்தில் சாகித்கான்(வயது32) என்ற வாலிபரும் பலியானார். புறநகர் காட்கோபரை சேர்ந்த இவர், காட்கோபர் ரெயில் நிலையம் அருகே பெல்ட் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார்.

சம்பவத்தன்று சாகித்கானும், அவரது தந்தை சிராஜ் கானும் கடைக்கு மொத்தமாக பெல்ட் வாங்குவதற்கு ஆர்டர் கொடுக்க கிராபர்ட் மார்க்கெட்டிற்கு சென்றிருந்தனர்.

இரவு அங்கிருந்து வீடு திரும்புவதற்காக சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் நோக்கி அந்த நடைமேம்பாலத்தின் கீழ் நடந்து வந்து கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் தான் இந்த துயர சம்பவம் நடந்துவிட்டது. நடைமேம்பாலம் இடிந்து தங்களை நோக்கி கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுவதை பார்த்ததும் பதறிப்போன சாகித்கான் சுதாரித்து கொண்டு தனக்கு முன்னால் நடந்து சென்று கொண்டு இருந்த தந்தை சிராஜ்கானை தள்ளிவிட்டார். இதில், அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

ஆனால் இந்த கோர விபத்தில் சாகித்கான் தனது உயிரை காப்பாற்றி கொள்ள முடியாமல் போனது. தந்தையை தள்ளிவிட்டு தானும் தப்பித்து கொள்ள முயற்சிப்பதற்குள் மேம்பாலத்தின் இடிபாடுகள் அவர் மீது வேகமாக விழுந்து அமுக்கின.

இதில் தந்தையின் கண்முன்னேயே சாகித்கான் துடிதுடித்து இறந்து போனார். கண்இமைக்கும் நொடி பொழுதில் இது நடந்து முடிந்து விட்டது.

சாகித்கான் தனது தந்தையை தள்ளிவிடாமல் இருந்திருந்தால் சிராஜ் கானும் இறந்து இருப்பார் என அவருடன் வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த மக்சூத்கான் என்பவர் கூறினார்.

நடைமேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் தந்தையை காப்பாற்றி விட்டு தனது உயிரை பறிகொடுத்த சாகித் கானுக்கு மனைவியும், 8 வயது மகள் மற்றும் 8 மாதத்தில் பெண் குழந்தையும் இருக்கின்றனர்.

சாகித்கான் இறப்பு தங்களை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டதாக அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

‘உயிருக்கு போராடியவர்களை காப்பாற்றாமல் செல்போனில் படம் பிடித்தனர்’ நடைமேம்பால விபத்தில் காயமடைந்தவர் வேதனை

‘உயிருக்கு போராடியவர்களை காப்பாற்ற முயற்சி செய்யாமல், பலர் செல்போனில் படம் பிடித்து கொண்டு இருந்தனர்’ என மும்பை நடைமேம்பால விபத்தில் காயமடைந்தவர் வேதனையுடன் கூறினார்.

மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் அருகில் கடந்த 14-ந்தேதி நடைமேம்பாலம் இடிந்த விபத்தில் 3 நர்சுகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் தான் செயின்ட் ஜார்ஜ் ஆஸ்பத்திரி மற்றும் ஜி.டி. ஆஸ்பத்திரி உள்ளது. ஆனால் விபத்தில் சிக்கியவர்கள் பலர் 30 நிமிடங்களுக்கு பிறகு தான் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விபத்து நடந்த இடத்தில் இருந்து சில மீட்டர் தூரத்தில் மாநகராட்சி தலைமையகம் இருந்தும் கூட மீட்பு படையினர் 20 நிமிடங்கள் கழித்து தான் சம்பவ இடத்துக்கு சென்று உள்ளனர்.

செல்போனில் படம்பிடித்தனர்

இது குறித்து விபத்தில் சிக்கி காயமடைந்த வாலிபர் ஒருவர் கூறியதாவது:-

நடைமேம்பாலம் இடிந்து கீழே விழுந்தபோது எனது காலில் படுகாயம் ஏற்பட்டது. எனவே என்னால் நடக்க முடியவில்லை. இடிபாடுகளில் சிக்கி என் கண் முன்னேயே சிலரது உயிர் பிரிந்தது. அப்போது, அங்கு சுற்றி இருந்தவர்கள் படுகாயங்களுடன் போராடியவர்களை காப்பாற்ற முயற்சி செய்யாமல் தங்களது செல்போனில் படம் பிடித்து கொண்டு இருந்தனர்.

இதற்கிடையே திருட்டு கும்பலை சேர்ந்த சிலர் காயமடைந்தவர்களின் பணப்பை, செல்போன்களை எடுத்து சென்றனர். இவ்வாறு அவர் வேதனையுடன் கூறினார்.

Next Story