பாரதீய ஜனதா ஆட்சியில் தலித் மக்கள் மீது தாக்குதல் நாராயணசாமி வேதனை


பாரதீய ஜனதா ஆட்சியில் தலித் மக்கள் மீது தாக்குதல் நாராயணசாமி வேதனை
x
தினத்தந்தி 17 March 2019 12:05 AM GMT (Updated: 17 March 2019 12:05 AM GMT)

பாரதீய ஜனதா ஆட்சியில் தலித் மக்கள் தாக்கப்படுகின்றனர் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி வேதனை தெரிவித்தார்.

புதுச்சேரி,

புதுவை காங்கிரஸ் கட்சியின் எம்.பி. வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் காங்கிரஸ் ஆதிதிராவிட பிரிவு நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு காங்கிரஸ் மாநில தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

ஆதிதிராவிட மக்களுக்கான திட்டங்களை காங்கிரஸ் கட்சிதான் முழுமையாக நிறைவேற்றி வருகிறது. கடந்த 2004 முதல் 2014 வரை அவை சிறப்பாக செயல்படுத்தப்பட்டன. ஆனால் இப்போது அந்த சமுதாய மக்கள் தாக்கப்படுகின்றனர்.

வடகிழக்கு மாநிலங்களில் மலைவாழ் மக்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் விவசாயம் செய்ய உரிமை கொடுத்தோம். ஆனால் இப்போதுள்ள மத்திய ஆட்சியாளர்கள் அதை பறித்துவிட்டனர். தலித் மக்களுக்கு முதல் எதிரி பிரதமர் நரேந்திர மோடிதான்.

புதுவையில் மருத்துவ படிப்புக்கு தேர்வாகும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு இலவச கல்வி கொடுக்க கோப்பு அனுப்பினோம். ஆனால் அதற்கு முட்டுக்கட்டை போட்ட கவர்னர் கிரண்பெடி விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பி கொடுமையான காரியத்தை செய்துள்ளார்.

ராகுல் பிரதமரானதும் இவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். ராகுல்காந்தி அறிவிக்கும் வேட்பாளரின் வெற்றிக்கு காங்கிரஸ் தொண்டர்கள் இரவு பகலாக உழைக்கவேண்டும். இந்த தேர்தல் தலித் மக்களுக்கான வாழ்க்கை பிரச்சினை.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார். கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் பேசியதாவது:-

இந்த தேர்தலில் ஜனநாயகம் காக்கப்படாவிட்டால் பின்னர் எப்போதும் காக்க முடியாது. பிரதமர் மோடியின் சர்வாதிகார ஆட்சிதான் நடக்கும். இந்த ஆட்சியில் மோடியும், அமித்ஷாவும்தான் பேசுகிறார்கள். ஆனால் எங்கள் ஆட்சியில் அனைத்து மந்திரிகளுக்கும் ஜனநாயக உரிமை வழங்கப்பட்டு பேசினார்கள். அமைச்சர்களுக்கு கருத்து சுதந்திரம் இருந்தது.

புதுவை மக்களுக்காக முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தினார்கள். அதன்பின் சில திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி மன்கீ பாத் நிகழ்ச்சியில் மட்டும் மக்களிடையே பேசினார். ஆனால் தற்போது ராகுல்காந்தி கல்லூரி மாணவிகளிடம் உரையாடியது மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது. நமது கூட்டணி புதுவை, தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும். அதிலும் புதுச்சேரி முதல் தொகுதியாக இருக்கவேண்டும். இவ்வாறு சஞ்சய்தத் பேசினார்.

கூட்டத்தில் அமைச்சர் கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் தீப்பாய்ந்தான், விஜயவேணி, முன்னாள் அமைச்சர் ஏழுமலை, முன்னாள் எம்.எல்.ஏ. நீல.கங்காதரன், ஆதிதிராவிட அணி தலைவர் வீரமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story