புதுச்சேரியில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவப்படை வருகை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்


புதுச்சேரியில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவப்படை வருகை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்
x
தினத்தந்தி 17 March 2019 5:50 AM IST (Updated: 17 March 2019 5:50 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப்படையினர் வந்துள்ளனர். அவர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

தமிழகம், புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 18-ந் தேதி நடைபெற உள்ளது.

தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் கட்சிகள் மும்முரமாக உள்ளன.

தேர்தலை அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு இருக்கிறது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

புதுவை எம்.பி. தொகுதிக்கான தேர்தல் மற்றும், காலியாக உள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில் தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது.

வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள், மது பானங்கள் கொடுப்பதை தடுக்கும் விதமாக தேர்தல்துறை, காவல்துறை, கலால்துறை இணைந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. புதுவை எல்லைக்குள் நுழையும் வாகனங்களும், புதுவையில் இருந்து வெளியேறும் வாகனங்களும் கடும் சோதனைக்கு பின்னரே விடுவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக துணை ராணுவப்படையினரும் வரவழைக்கப்படுவார்கள் என்று தேர்தல்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர். அதன்படி பாதுகாப்புக்காக துணை ராணுவப்படையினர் 100 பேர் நவீன துப்பாக்கிகளுடன் நேற்று புதுச்சேரி வந்துள்ளனர்.

அவர்கள் உள்ளூர் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். நகரின் முக்கிய சந்திப்புகளில் நேற்று அவர்கள் வாகன சோதனைகளில் ஈடுபட்டனர். அவர்கள் புதுவை மாநிலத்தின் காவல் பிரிவுகள் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய 4 பிரிவுகளுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் மாநில எல்லைப்பகுதிகளில் நடைபெறும் சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். புதுச்சேரிக்கு மேலும் 8 கம்பெனியை சேர்ந்த துணை ராணுவ வீரர்கள் கேட்கப்பட்டுள்ளனர். புதுச்சேரிக்கு வந்துள்ள துணை ராணுவ வீரர்கள் அந்தந்த பகுதி உள்ளூர் போலீசாருடன் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினார்கள். அவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு மாறன், இன்ஸ்பெக்டர் அறிவுச் செல்வம் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினார்கள்.

இந்த நிலையில் வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் தலைமையில் லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தன், வீரன் மற்றும் போலீசார் கருவடிக்குப்பம், சாமிபிள்ளை தோட்டம், அணைக்கரை மேடு உள்ளிட்ட பகுதிகளில் துணை ராணுவத்தினருடன் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள்.

உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் பல்வேறு பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள். அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் புருஷோத்தமன், ராஜன் மற்றும் துணை ராணுவத்தினர் அரியாங்குப்பம், வீராம்பட்டினம் பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள்.

Next Story