உஷாரய்யா உஷாரு
அவர்கள் இல்லற வாழ்க்கை மிக அமைதியாக சென்றுகொண்டிருந்தது. திருமணமாகி ஏழெட்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. ஆனாலும் அதை அவர்கள் ஒரு குறையாக கருதவில்லை.
அவர்கள் இல்லற வாழ்க்கை மிக அமைதியாக சென்றுகொண்டிருந்தது. திருமணமாகி ஏழெட்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. ஆனாலும் அதை அவர்கள் ஒரு குறையாக கருதவில்லை. அவள் அருகில் உள்ள பள்ளி ஒன்றுக்கு சென்று குழந்தை களுக்கு கதை சொல்லிக்கொடுக்கும் ஆசிரியையாக பணியாற்றினாள். அதில் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு வருமானம் வராவிட்டாலும், அவளது மனதுக்கு மகிழ்ச்சி கிடைத்தது. கணவர் சொந்தமாக வைத்திருந்த சொகுசு வேன் ஒன்றை வாடகைக்கு இயக்கிக்கொண்டிருந்தார்.
அவர்கள் வசித்த பகுதிக்கு நடு்த்தர வயது பெண் ஒருத்தி தனது மகளோடு புதிதாக குடிவந்தாள். அவளது நடையும், உடையும் மற்றவர்களை அதிகம் கவர்வதாக இருந்தது. அவள் தானாகவே அருகில் உள்ளவர்களின் வீடுகளை தேடிச் சென்று அவர்களிடம் நட்பு பாராட்டினாள். அவர்களுக்கு மருத்துவம், காப்பீடு, வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்வது போன்ற விஷயங்களுக்கு ஆலோசனையும் வழங்கி வந்தாள். எல்லா ஆண்களிடமும் சகஜமாக பழகவும் செய்தாள்.
அந்த ஆசிரியைக்கு குழந்தை இல்லாததை தெரிந்துகொண்டு, பிரபலமான டாக்டர்கள் சிலரின் பெயர்களைகூறி அவர்களில் யாராவது ஒருவரிடம் சிகிச்சை பெற்றால், தாய்மையடைய வாய்ப்பு இருப்பதாக கூறினாள். அது தொடர்பாக அடிக்கடி அந்த ஆசிரியையும், கணவரும் அடிக்கடி அவளிடம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
மாதங்கள் கடந்துகொண்டிருந்தன. ஆசிரியை, தனது கணவரின் செயல்பாடு களில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை உணர்ந்தாள். இரவு பகல் பாராமல் வேன் ஓட்டிச் செல்லும் கடுமையான உழைப்பாளியாக இருந்த அவர், சோம்பேறித்தனம் கொள்ளத் தொடங்கினார். பின்பு வேனை ஓட்ட இன்னொரு டிரைவரை ஏற்பாடு செய்துவிட்டு, கூடுதலாக வேறு சில தொழில்களை செய்வதாக கூறி அடிக்கடி வெளியூர் சென்றார். திடீரென்று வீட்டில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. ஒரு சிலர் அவருக்கு வட்டிக்கு பணம் கொடுத்திருப்பதாக கூறி வசூலுக்கு வீடு தேடி வந்தார்கள்.
இந்த நிலையில் திடீரென்று ஒருநாள், அந்த நடுத்தர வயது பெண் கோபமாக ஆசிரியையின் வீட்டிற்கு வந்தாள். அவள் வந்தபோது ஆசிரியை மட்டுமே வீட்டில் இருந்தாள். ‘உன் கணவர் என்னிடம் இதுவரை எட்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். அதற்காக சில மாதங்களாக வட்டியும் கட்டவில்லை. இப்போது நான் போனில் தொடர்பு கொண்டாலும் அவர் பேசுவதில்லை. பத்து நாட்களுக்குள் ஒழுங்காக அசலையும், வட்டியையும் திருப்பித்தராவிட்டால் நான் போலீசுக்கு போகவேண்டியதிருக்கும்’ என்று சீறிய அவள், அவர் வாங்கிய கடனுக்காக எழுதிக்கொடுத்திருந்த கடன் பத்திரத்தையும் ஆசிரியையிடம் காட்டினாள்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை, கணவரிடம் ‘நீங்கள் இவ்வளவு கடன்வாங்க என்ன காரணம்?’ என்று கேட்டாள். அப்போது அவர், ‘நான் தொடங்கிய சில புதிய தொழில்களில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. அதை ஈடுகட்ட தொடர்ந்து கடன்வாங்கி, கடன்காரனாகிவிட்டேன். என்னால் வெளியே தலைகாட்ட முடியவில்லை. அதிலும் எட்டு லட்சம் ரூபாய் தந்திருக்கும் அந்த பெண்மணி ராட்சஷி மாதிரி நடந்துகொள்கிறாள். என்ன செய்வதென்றே தெரியவில்லை’ என்றார்.
மனைவியோ, ‘நகைகளை விற்றும், உறவினர்கள் சிலரிடம் கடன் வாங்கியும் ஒரு சில லட்ச ரூபாயை அவளுக்கு முதலில் வழங்குகிறேன். நானே அவளிடம் பேசி, கடனை சீக்கிரம் தீர்த்துவிடுகிறோம் என்று உறுதி கொடுத்து அவளை அமைதிப்படுத்துகிறேன்’ என்றாள். ஆனால் அவரோ, ‘நான் தெரியாமல் கடன் பத்திரம் எழுதிக்கொடுத்துவிட்டேன். முழுகடனையும் வட்டியோடு திருப்பி செலுத்தாவிட்டால் அவள் என்னை போலீசில் பிடித்துக் கொடுத்துவிடுவாள். அதனால் நான் சில மாதங்கள் தலைமறைவாகிவிடப்போகிறேன். நீ எப்படியாவது சமாளித்து, உன்னால் முடிந்த அளவு பணத்தை புரட்டிவை. அதுவரை நீ என்னிடம் போனில்கூட பேச முயற்சிக்க வேண்டாம்...’ என்று கூறிவிட்டு, மனைவியிடம் இருந்த சில தங்க நகைகளை வாங்கிக்கொண்டு, கிளம்பிப்போய்விட்டார்.
அவள் நிலைகுலைந்துபோனாள். வட்டிக்கு கடன் கொடுத்தவர்கள் வீடு தேடிவந்து தொந்தரவு கொடுத்தார்கள். அந்த பெண்ணும் சில நாட்கள் தேடிவந்தாள். அத்தனை பேரையும் சமாளிக்க முடியாமல் அவள் தனது தாய் வீட்டிற்கு போய்விட்டாள்.
சில வாரங்கள் கடந்த நிலையில் உறவினர் ஒருவர் கூறிய தகவல் அவளுக்குள் இடியாய் இறங்கியது. ‘உன் கணவரையும், அவருக்கு எட்டு லட்சம் ரூபாய் கடன் கொடுத்ததாக சொன்ன அந்த பெண்ணையும், நாங்கள் குடும்பத்தோடு சென்ற கோடை வாசஸ்தலத்தில் ஜோடியாக பார்த்தோம். அவர்கள் ஒன்றாக வாழ்கிறார்கள். திட்டம்போட்டு உன்னை ஏமாற்றிவிட்டார்கள்’ என்றார்.
அதன் பின்புதான் கணவருக்கும்- அந்த பெண்ணுக்கும் இடையே இருந்த ரகசிய தொடர்பு பற்றி அவளுக்கு தெரியவந்தது. அதுபற்றி ஊரில் உள்ள அவரது நண்பர்கள் சிலரிடம் விசாரித்தபோது, ‘உன் கணவனுக்கும், அவளுக்கும் முன்பே அதிக நெருக்கம் ஏற் பட்டுவிட்டது. பலரிடமும் கடன் வாங்கி அவளுக்கு கொடுத்தான். அந்த கடனை தீர்க்க முடியாமல் அவன் தவித்ததும், அதையே காரணங்காட்டி அவனை தன்னோடு அழைத்துச்செல்ல அவள் திட்டமிட்டுவிட்டாள். அவளிடம் உன் கணவன் சில லட்சங்கள் கடன் வாங்கி யதுபோல் போலி பத்திரம் தயார் செய்து, அதையே காரணமாக்கி பிரச்சினையை உருவாக்கி, தன்னோடு அழைத்துச்சென்றுவிட்டாள்’ என்று கூறினார்கள்.
விதியை நொந்தபடி அவள் தாய் வீட்டில் முடங்கிக்கிடக்கிறாள்.
மனைவியை எப்படி எல்லாம் கணவர் ஏமாற்றுகிறார் பார்த்தீர்களா?!
- உஷாரு வரும்.
Related Tags :
Next Story