வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் போது தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்திய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் கலெக்டர் தகவல்


வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் போது தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்திய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 18 March 2019 4:30 AM IST (Updated: 17 March 2019 8:11 PM IST)
t-max-icont-min-icon

வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் போது தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்திய நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று கலெக்டர் கந்தசாமி கூறியுள்ளார்.

திருவண்ணாமலை, 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18–ந் தேதி நடைபெறுகிறது. திருவண்ணாமலை மற்றும் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 26–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை தாக்கல் செய்யலாம்.

வேட்பு மனு தாக்கல் நேரம் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே. திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முதல் தளத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரிடமும், ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதல் தளத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலரிடமும் வேட்பு மனுக்களை அளித்திடலாம். மேலும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திடும் போது இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்திய நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் முந்தைய நாளில் இருந்து மட்டுமே தேர்தல் செலவினத்திற்காக புதிதாக வங்கி கணக்கினை தொடங்க வேண்டும். ஏற்கனவே உள்ள வங்கி கணக்கு விவரம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அனைத்து வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், அஞ்சலகங்களில் புதிதாக வங்கி கணக்கு தொடங்கலாம்.

வங்கி கணக்கு வேட்பாளர் பெயரிலோ அல்லது வேட்பாளர் மற்றும் அவரது தேர்தல் முகவர் ஆகியோர் கொண்ட கூட்டு வங்கி கணக்காகவோ தொடங்கலாம். வேட்பாளர் அவரது குடும்ப உறுப்பினர்களை கூட்டாக கொண்டு வங்கி கணக்கு தொடங்கக்கூடாது.

வங்கி கணக்கு விவரத்தினை வேட்பு மனு தாக்கல் செய்யும் போது தர வேண்டும். வேட்பு மனுவுடன் வேட்பாளர் சம்பந்தப்பட்ட Form 26 Criminalization Affidavit ஒன்றினை நோட்டரி பப்ளிக் சான்றுடன் தாக்கல் செய்ய வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்ய டெபாசிட் தொகை ரூ.25 ஆயிரம் ரொக்கமாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் செலுத்த வேண்டும். காசோலை, வரைவோலை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினருக்கான வேட்பு மனு தாக்கல் டெபாசிட் தொகை ரூ.12 ஆயிரத்து 500. தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் எனில் அசல் சாதி சான்றினை வேட்பு மனுவுடன் தாக்கல் செய்ய வேண்டும்.

வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் போது தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் எல்லைக்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்பாளருடன் 4 நபர்கள் மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலகத்துக்கு வர வேண்டும். அரசியல் கட்சி வேட்பாளர்கள் பிரசார வாகனத்திற்கு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மட்டுமே அனுமதி பெறவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story