வேலூர் மாவட்டத்தில் 326 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை


வேலூர் மாவட்டத்தில் 326 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
x
தினத்தந்தி 18 March 2019 4:00 AM IST (Updated: 17 March 2019 8:55 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் 326 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

ஆம்பூர், 

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்ய கலெக்டர் ராமன் ஆம்பூர் தாலுகா அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர், தேர்தலுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

ஆய்வின் போது மாவட்ட வழங்கல் அலுவலர் பேபி இந்திரா, தாசில்தார் சுஜாதா மற்றும் தேர்தல் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடக்கிறது. இதனால் ஆம்பூர் தொகுதி மக்கள் 2 வாக்கு செலுத்த வேண்டும். வாக்குச்சாவடியில் பணிபுரிய உள்ளவர்களுக்கு வருகிற 24-ந் தேதி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அவர்களுக்கு 4 கட்ட பயிற்சி அளிக்கப்படும்.

வேலூர் மாவட்டத்தில் 326 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கும், ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை வேலூரில் உள்ள தந்தை பெரியார் என்ஜினீயரிங் கல்லூரியில் தான் நடக்கும்’ என்றார்.

அதைத்தொடர்ந்து வாணியம்பாடி தாலுகா அலுவலகத்திற்கு சென்று தேர்தல் பணிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் குறித்தும், அதன் விவரங்களையும் கேட்டறிந்தார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, தாசில்தார் முருகன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

முன்னதாக குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கும் பாதுகாப்பு அறைகளை கலெக்டர் எஸ்.ஏ.ராமன் ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து மண்டல அலுவலர்களுக்கான வாக்குச்சாவடி மையங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது தாசில்தார் சாந்தி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராமநந்தினி, வட்ட வழங்கல் அலுவலர் நெடுமாறன், துணை தாசில்தார் பலராமன், கிராம நிர்வாக அலுவலர்கள் தரணி, சசிகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story