காளைவிடும் விழாவில் மாடுகள் முட்டியதில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 50 பேர் காயம்
ஆரணி அருகே நடந்த காளைவிடும் விழாவில் மாடுகள் முட்டியதில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 50 பேர் காயம் அடைந்தனர்.
ஆரணி,
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த குண்ணத்தூர் கிராமத்தில் காளைவிடும் விழா நடந்தது. இதில் பங்கேற்பதற்காக திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, காஞ்சீபுரம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. கால்நடை டாக்டர்கள் அடங்கிய குழுவினரின் பரிசோதனைக்கு பிறகு தகுதியான காளைகள் களம் இறங்க அனுமதிக்கப்பட்டன. விழாவை வேடிக்கை பார்க்க சாலையின் இருபுறமும் ஆண்களும், பெண்களும் திரண்டிருந்தனர்.
இந்த நிலையில் வாடிவாசல் வழியாக காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அப்போது சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள் முட்டியதில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் கீழ்நகர் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் (25), அரியப்பாடியை சேர்ந்த தமிழரசன் (14), வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த அஜீத்குமார் (19), வெள்ளூர் கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன் (24) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டு இருந்த மருத்துவ குழுவினர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. விழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story