வடபழனியில் மூதாட்டிகளை குறி வைத்து நகை திருடிய 2 பெண்கள் கைது


வடபழனியில் மூதாட்டிகளை குறி வைத்து நகை திருடிய 2 பெண்கள் கைது
x
தினத்தந்தி 18 March 2019 4:00 AM IST (Updated: 17 March 2019 9:51 PM IST)
t-max-icont-min-icon

மூதாட்டிகளை குறி வைத்து நகை திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

பூந்தமல்லி,

சென்னை வடபழனியை சேர்ந்தவர் ஜீனத்(வயது 70). கடந்த வாரம் வடபழனியில் உள்ள தனியார் விடுதி அருகே நடந்து சென்றபோது, ஆட்டோவில் வந்த 3 பெண்கள் ஜீனத்திடம் பேச்சுகொடுத்து அவரை ஆட்டோவில் அமர வைத்து நைசாக அவரிடமிருந்த 6 பவுன் நகையை திருடிச் சென்றனர்.

இதேபோல் ருக்மணி(75) என்ற மூதாட்டியையும் ஆட்டோவில் அழைத்துச் சென்று உதவுவது போல் நடித்து 5 பவுன் நகையை அதே பெண்கள் திருடிச் சென்றனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் நடந்த இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான அந்த பெண்களின் உருவத்தை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அவர்கள், மதுரையை சேர்ந்த முத்தம்மாள்(29), முத்துமாரி(27) மற்றும் மீனா என்பதும், இவர்கள் சென்னையில் பல்வேறு இடங்களில் மூதாட்டிகளை குறி வைத்து ஆட்டோவில் சென்று முகவரி கேட்பது போல் நடித்தும், செல்லும் வழியில் இறக்கி விடுவதாக அவர்களுக்கு உதவுவதுபோல் நடித்து ஆட்டோவில் ஏற்றிச்சென்றும் அவர்கள் கவனத்தை திசை திருப்பி நகை திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.

திருடிய நகைகளை கோயம்பேடு அருகே விற்க வருவதாக வந்த தகவலின்பேரில் அங்கு மறைந்து இருந்த தனிப்படை போலீசார், முத்தம்மாள் மற்றும் முத்துமாரி இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 19 பவுன் நகைகள் மீட்கப்பட்டது. இவர்கள் வடபழனி, விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பல மூதாட்டிகளிடம் இதேபோல் கவனத்தை திசை திருப்பியும், உதவி செய்வது போல் நடித்தும் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். கைதான இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவான மீனாவை தேடி வருகின்றனர்.

Next Story