கொடைக்கானல் அருகே, வீட்டை சேதப்படுத்திய காட்டுயானைகள் - கேரட், பீன்ஸ் பயிர்களையும் நாசப்படுத்தின


கொடைக்கானல் அருகே, வீட்டை சேதப்படுத்திய காட்டுயானைகள் - கேரட், பீன்ஸ் பயிர்களையும் நாசப்படுத்தின
x
தினத்தந்தி 17 March 2019 11:30 PM GMT (Updated: 17 March 2019 6:57 PM GMT)

கொடைக்கானல் அருகே காட்டுயானைகள் வீட்டை சேதப்படுத்தின. மேலும் கேரட், பீன்ஸ் பயிர்களையும் நாசப்படுத்தின.

கொடைக்கானல்,

கொடைக்கானல் வனப்பகுதியில் மான், காட்டெருமை, யானை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இவை தண்ணீர், இரைக்காக அடிக்கடி குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்களுக்குள்ளும் புகுந்து வருகின்றன. குறிப்பாக காட்டுயானைகள் அடிக்கடி புகுந்து விவசாய பயிர்களையும், வீடுகளையும் சேதப்படுத்தி வருகின்றன.

அதன்படி நேற்று முன்தினம் கொடைக்கானல் அருகே உள்ள கூம்பூர்வயல் பகுதியில் காட்டுயானைகள் புகுந்தன. பின்னர் அங்குள்ள சாமுவேல் என்பவருடைய வீட்டை சேதப்படுத்தின. இதில் வீடு தரைமட்டமானது. ஆனால் வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பீன்ஸ், கேரட் உள்ளிட்ட பயிர்களையும் நாசப்படுத்தின.

தற்போது கொடைக்கானலில் உள்ள தனியார் தோட்டத்தில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் மீண்டும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாகவே காட்டுயானைகள் குடியிருப்பு மற்றும் தோட்டங்களுக்குள் புகுந்து வருகின்றன.

எனவே யானைகள் தண்ணீர் குடிக்கும் வகையில் வனப்பகுதியில் தொட்டிகள் அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Next Story