திருவோணம் அருகே 4 ஆடுகளை கடித்து கொன்றது, சிறுத்தையா? வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை


திருவோணம் அருகே 4 ஆடுகளை கடித்து கொன்றது, சிறுத்தையா? வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை
x
தினத்தந்தி 17 March 2019 11:00 PM GMT (Updated: 17 March 2019 9:15 PM GMT)

திருவோணம் அருகே 4 ஆடுகளை கடித்து கொன்றது சிறுத்தையா? என வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, திருவோணம் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறி வருகிறார்கள். சிறுத்தையை சிலர் நேரில் பார்த்ததாகவும் கூறப்படுகிறது. ஒரத்தநாட்டை அடுத்துள்ள பின்னையூர் பகுதியில் உள்ள ஏரி கரையோர பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என பட்டுக்கோட்டையை சேர்ந்த வனத்துறை அதிகாரிகள் கடந்த வாரம் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சிறுத்தை பதுங்கி இருப்பதற்கான முகாந்திரம் இல்லை என்பது தெரியவந்தது. ஆனாலும் சிறுத்தை நடமாட்டம் குறித்த பீதி அப்பகுதி கிராம மக்களிடம் உள்ளது.

இந்த நிலையில் திருவோணம் அருகே வெள்ளத்தேவன்விடுதி கிராமத்தை சேர்ந்த விவசாயி முத்துசாமி (வயது65) என்பவர் தனது ஆடுகளை நேற்று முன்தினம் இரவு தனது வீடு அருகே கட்டி வைத்திருந்தார். நேற்று அதிகாலையில் பார்த்தபோது அங்கு 4 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தன.

ஆடுகளின் உடலில் கடித்து குதறப்பட்டதற்கான அடையாளங்கள் தென்பட்டன. மேலும் 2 ஆடுகள் கடித்து குதறிய காயங்களுடன் கிடந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்துசாமி மற்றும் அவருடைய குடும்பத்தினர் திருவோணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் திருவோணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேகநாதன், ஏட்டு சரவணன், வனத்துறையை சேர்ந்த அதிகாரி ராமதாஸ் உள்ளிட்டோர் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஆடுகளை கடித்து குதறியது எந்த விலங்கு? சிறுத்தையா? அல்லது வேறு விலங்கா? என்பது பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.

சிறுத்தையின் கால் தடம் அங்கு உள்ளதா? என்றும் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் எந்த விலங்கு ஆடுகளை கடித்து குதறியது என்பது மர்மமாகவே உள்ளது. சிலர் ஆடுகளை கடித்தது காட்டுப்பூனை என்றும், சிலர் சிறுத்தை என்றும் கூறுகிறார்கள். இதன் காரணமாக கிராம மக்களை அச்சுறுத்தி வரும் விலங்கு எது? என்பதை கண்டறிய வனத்துறையினர் திணறி வருகிறார்கள்.

இந்த நிலையில் வனத்துறையினர் அந்த பகுதியில் முகாமிட்டு ஆடுகளை கடித்து கொன்றது சிறுத்தையா? காட்டுப்பூனையா? அல்லது வேறு விலங்கா? என்பதை கண்டறிய தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆடுகளை கடித்து கொன்றது சிறுத்தை தான் என்றும், வேறு விலங்கால் இவ்வாறு கடித்து குதறியிருக்க முடியாது என்றும் அப்பகுதி விவசாயிகள் கூறுகிறார்கள். ஆடுகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story