மேலூர் அருகே பரிதாபம்: மோட்டார் சைக்கிள் மோதி கீழே விழுந்த வாலிபர் பஸ் சக்கரத்தில் சிக்கி பலி
மேலூர் அருகே சாலையை கடக்க முயன்ற வாலிபர் மோட்டார் சைக்கிள் மோதி கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த பஸ் சக்கரத்தில் சிக்கி அவர் பரிதாபமாக இறந்துபோனார்.
மேலூர்,
விருதுநகர் அருகே உள்ள விளாம்பட்டியை சேர்ந்தவர் செந்தில். இவருடைய மகன் வீரகுமார் (வயது 19). இவர் விருதுநகரில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் தனியார் ஆம்னி பஸ்சில் கிளனராக வேலை செய்து வந்தார். வழக்கம்போல் வீரகுமார் நேற்று முன்தினம் இரவு விருதுநகரில் இருந்து சென்னை செல்லும் ஆம்னி பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.
மேலூர் அருகே ஓட்டலில் சாப்பாடு வாங்குவதற்காக டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பஸ் நின்ற சாலையின் மறுபுறம் ஓட்டல் இருந்தது. இதனால் வீரகுமார் சாலையை கடந்து ஓட்டலுக்கு செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை அவர் கவனிக்கவில்லை. அப்போது கண் இமைக்கும் நேரத்தில் அந்த மோட்டார் சைக்கிள் வீரகுமார் மீது பலமாக மோதியது. இதில் சாலையின் நடுவில் காயமடைந்து அவர் விழுந்தார்.
அந்த நேரத்தில் அவ்வழியாக சென்ற அரசு டவுன் பஸ், சாலையில் விழுந்து கிடந்த வீரகுமார் மீது ஏறியது. இதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய வீரகுமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்துபோனார். ஒருசில நிமிடங்களில் இந்த விபத்து சம்பவம் நடந்து முடிந்தது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மேலூர் போலீசார், விபத்தில் இறந்துபோன வீரகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story