மது வாங்குபவர்களின் வயது வரம்பை 25ஆக உயர்த்தலாம் ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
மது வாங்குபவர்களின் வயது வரம்பை 21-ல் இருந்து 25ஆக உயர்த்தலாம் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மதுரை,
புதுக்கோட்டையை சேர்ந்த அஞ்சம்மாள், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
புதுக்கோட்டை மாவட்டம் உப்பிலியக்குடியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் டாஸ்மாக் கடை நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடத்தில் டாஸ்மாக் கடை செயல்படுவதால், மதுபோதையில் வரும் பலர், மாணவ-மாணவிகள், பெண்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர். இதையடுத்து டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று உப்பிலியக்குடி கிராம ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் கடை மூடப்படவில்லை. எனவே உப்பிலியக்குடி டாஸ்மாக் கடையை மூட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் கணபதிசுப்பிரமணியன் ஆஜராகி, “உப்பிலியக்குடி பகுதியில் விதிகளை மீறி, டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இந்த கடையால் அங்குள்ளவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்” என்று வாதாடினார்.
இதையடுத்து நீதிபதிகள், “21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்கக்கூடாது என்று தமிழ்நாடு மதுபான உரிமம் மற்றும் அனுமதிக்கான விதி தெரிவிக்கிறது. இந்த விதியை மீறினால் 6 மாதம் வரை ஜெயில் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதிக்கலாம். ஆனால் இந்த விதியின்படி இதுவரை ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. மகாராஷ்டிரா, சண்டிகர், புதுடெல்லி, அரியானா, மேகாலயா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 25 வயது நிறைவடைந்தவர்களுக்கு மது விற்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. அந்த மாநிலங்களில் 25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதில்லை. அதன்படி தமிழகத்திலும் மது வாங்குபவர்களின் வயது வரம்பை 21-ல் இருந்து 25 ஆக உயர்த்தலாம். இதுதொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யலாம். வயது வரம்பு விதிமீறல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களையும் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.
Related Tags :
Next Story