தீயில் கருகி இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்து கொடுக்காததால் உறவினர்கள் சாலை மறியல்


தீயில் கருகி இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்து கொடுக்காததால் உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 17 March 2019 9:30 PM GMT (Updated: 17 March 2019 9:59 PM GMT)

காவேரிப்பட்டணம் அருகே தீயில் கருகி இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்து கொடுக்காததால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காவேரிப்பட்டணம், 

கிருஷ்ணகிரி அடுத்த சின்னமுத்தூர் கம்பளிக்கான் தெருவைச் சேர்ந்தவர் டான் (வயது 50). ஜோதிடர். இவர் கடந்த 10-ந் தேதி இரவு அமாவாசை வீட்டில் யாகம் வளர்த்து பூஜை செய்துள்ளார். பின்னர் யாகம் வளர்த்த நெருப்பை சரியாக அணைக்காமல் வெளியில் சென்று விட்டார். சிறிது நேரத்தில் அந்த நெருப்பு பரவி வீட்டில் இருந்த பொருட்கள் எரியத் தொடங்கியது. வீட்டில் இருந்த அவரது மனைவி அலமேலு வெளியில் ஓடி வந்து பக்கத்தில் இருந்தவர்களை அழைத்துள்ளார். அருகில் இருந்தவர்கள் வீட்டிற்குள் ஓடி தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

அதற்குள் தீ பரவியதில் வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்தது. இதில், அதே பகுதியைச் சேர்ந்த காவேரி, சவுந்தர், முனியப்பன் ஆகிய 3 பேர் தீயில் கருகி படுகாயம் அடைந்தனர். இதில், காவேரி, சவுந்தர் ஆகிய 2 பேரும் சேலம் தனியார் மருத்துவமனையிலும், முனியப்பன் வேலூர் தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, நேற்று முனியப்பன் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

இந்தநிலையில் நேற்று மாலை 6 மணி ஆகியும் இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்து கொடுக்கவில்லை எனக்கூறியும், தீவிபத்துக்கு காரணமான டானை கைது செய்ய வலியுறுத்தியும் முனியப்பனின் உறவினர்கள், பொதுமக்கள் இரவு 7.30 மணிக்கு சின்னமுத்தூர் கிராமத்தில் கிருஷ்ணகிரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் மற்றும் காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள், உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story