டிராக்டரில் மாட்டுச்சாணத்துடன் மறைத்து வைத்து ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்திய 2 பேர் கைது
கேரளாவுக்கு டிராக்டரில் மாட்டுச்சாணத்துடன் மறைத்து வைத்து ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
உத்தமபாளையம்,
தேனி மாவட்டம் கேரள மாநில எல்லை பகுதியில் அமைந்துள்ளது. இந்த நிலையில் கம்பம்மெட்டு, குமுளி மலைப்பாதை, போடிமெட்டு, சாக்குலூத்து மெட்டு ஆகிய மலைப்பாதைகள் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தி செல்வதை அதிகாரிகள் கண்காணிக்கும்படி கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து வருவாய்த்துறையினர் மற்றும் பறக்கும்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது நாடாளுமன்ற தேர்தல் பணி நடைபெறுவதால் அதிகாரிகளின் கண்காணிப்பு இருக்காது என்று கடத்தல் கும்பல் நூதன முறையில் ரேஷன் அரிசியை கடத்துவதாக மாவட்ட கலெக்டருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன்பேரில் உத்தமபாளையம் சப்-கலெக்டர் வைத்திநாதன் தலைமையில் பறக்கும் படை துணை தாசில்தார் ஜாகீர் உசேன், வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணி மற்றும் வருவாய்த்துறையினர் கம்பம்மெட்டு மலைப்பாதையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மாட்டுச்சாணம் ஏற்றிகொண்டு வந்த டிராக்டர் ஒன்றை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் ஏதும் இல்லை என்ற நிலையில் மற்ற வாகனங்களை சோதனை செய்ய முயன்றனர்.
அப்போது டிரைவர் டிராக்டரை வேகமாக ஓட்ட முயன்றார். இதில் சந்தேகமடைந்த அதிகாரிகள் அந்த டிராக்டரை மடக்கி பிடித்தனர். பின்னர் மீண்டும் சோதனை செய்தபோது, மாட்டுச்சாணத்துக்குள் தார்பாய் மூலம் மறைத்து வைத்து கடத்திய ரேஷன் அரிசி மூட்டைகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதில் 35 மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. உடனே ரேஷன் அரிசி மூட்டைகளையும், டிராக்டரையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து டிராக்டர் டிரைவர் சீலையம்பட்டியை சேர்ந்த சுருளிராஜா (வயது 40), அவருடன் வந்த பழனிசாமி (41) ஆகிய 2 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டை களையும், டிராக் டரையும் உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story