தனியார் தொலைக்காட்சி முன்னாள் நிர்வாகி பீட்டர் முகர்ஜி நெஞ்சு வலியால் ஆஸ்பத்திரியில் அனுமதி


தனியார் தொலைக்காட்சி முன்னாள் நிர்வாகி பீட்டர் முகர்ஜி நெஞ்சு வலியால் ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 17 March 2019 10:53 PM GMT (Updated: 17 March 2019 10:53 PM GMT)

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஷீனா போரா கொலை வழக்கில் கைதான தனியார் தொலைக்காட்சி முன்னாள் நிர்வாகி பீட்டர் முகர்ஜி நெஞ்சு வலி காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

மும்பை,

மும்பையில் பெற்ற மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக இந்திராணி கடந்த 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பிரபல தனியார் தொலைக்காட்சியின் முன்னாள் நிர்வாகியும், இந்திராணியின் 3-வது கணவருமான பீட்டர் முகர்ஜியும் கைது ஆனார். கொலைக்கு உடந்தையாக இருந்ததாக இந்திராணியின் 2-வது கணவர் சஞ்சீவ் கன்னாவும், இந்திராணியின் கார் டிரைவரான ஷியாம்வர் ராயும் கைது செய்யப்பட்டனர்.

இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்கு ஆகும்.

இந்த கொலை வழக்கில் பீட்டர் முகர்ஜி ‘சைலண்ட் கில்லர்’ ஆக இருந்துள்ளார் என்று சமீபத்தில் கோர்ட்டில் சி.பி.ஐ. கூறியது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்றும் சி.பி.ஐ. வலியுறுத்தியது.

இந்தநிலையில் பீட்டர் முகர்ஜிக்கு நேற்று முன்தினம் மாலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக மும்பை ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரி டீன் கூறுகையில், “நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறை கைதி பீட்டர் முகர்ஜியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. திங்கட்கிழமை(இன்று) அவருக்கு ஆஞ்சியோகிராபி சோதனை செய்யப்படும்” என்றார்.

பீட்டர் முகர்ஜியின் முதல் மனைவிக்கு பிறந்த மகனும், இந்திராணியின் முதல் கணவருக்கு பிறந்த மகள் ஷீனா போராவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்ற மகளை இந்திராணி கடந்த 2012-ம் ஆண்டில் கொலை செய்தார். பின்னர் கொலையை மறைத்து அவர் வழக்கம்போல ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

கொலைக்கு உடந்தையாக இருந்த கார் டிரைவர் ஷியாம்வர் ராய் குடிபோதையில உளறியதை தொடர்ந்து, 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பயங்கரம் வெளிச்சத்துக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கார் டிரைவர் ஷியாம்வர் ராய் அப்ரூவர் ஆக மாறினார். வழக்கில் கைதான யாருக்கும் இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story