தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்: தி.மு.க.போட்டியிடுவதற்கு இந்திய கம்யூனிஸ்டு எதிர்ப்பு - காங்கிரஸ் தலைவர்கள் சமரச முயற்சி


தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்: தி.மு.க.போட்டியிடுவதற்கு இந்திய கம்யூனிஸ்டு எதிர்ப்பு - காங்கிரஸ் தலைவர்கள் சமரச முயற்சி
x
தினத்தந்தி 18 March 2019 5:45 AM IST (Updated: 18 March 2019 5:27 AM IST)
t-max-icont-min-icon

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடுவதற்கு இந்திய கம்யூனிஸ்டு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அக்கட்சியினரை சமரசம் செய்யும் முயற்சியில் காங்கிரசார் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரி, 

தமிழகம் மற்றும் புதுவை நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. நாடாளுமன்ற தேர்தலுடன் புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் இத்தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் 2-வது இடத்தை பிடித்ததால் இந்த தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் இந்த தொகுதியில் தற்போது தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த கட்சியினர் அதிருப்தி அடைந்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயற்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்றும், தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரை சமரசப்படுத்தும் நடவடிக்கையில் காங்கிரஸ் கட்சியினர் இறங்கியுள்ளனர். நேற்று காலை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம், முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் முதலியார்பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு கட்சியின் மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலை நாதன் ஆகியோரை சந்தித்து பேசினர். அப்போது தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலிலும் கூட்டணி தொடர வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க.விற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

அப்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள் இது தொடர்பாக நிர்வாகக்குழுவில் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என்று கூறினர். இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சி தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீமிடம் கேட்ட போது, ‘நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு என்பதில் மாற்றம் இல்லை. தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து நிர்வாகக் குழு முடிவு செய்யும். அதில் எடுக்கும் முடிவை கட்சியின் மேலிடத்திற்கு தெரிவிப்போம். இறுதியாக அவர்கள் எடுக்கும் முடிவின் படி செயல்படுவோம்’. என்றார்.

Next Story