அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி உடுமலையில் பஸ்கள், பொதுஇடங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது - பொதுமக்களிடம் துண்டுபிரசுரம் வினியோகம்


அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி உடுமலையில் பஸ்கள், பொதுஇடங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது - பொதுமக்களிடம் துண்டுபிரசுரம் வினியோகம்
x
தினத்தந்தி 18 March 2019 4:00 AM IST (Updated: 18 March 2019 5:27 AM IST)
t-max-icont-min-icon

அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி உடுமலையில் பஸ்கள், பொது இடங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. பொதுமக்களிடம் துண்டுபிரசுரம் கொடுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

உடுமலை,

தமிழகத்தில் அடுத்த மாதம் 18-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி அறிவித்ததை தொடர்ந்து நன்னடத்தை விதிகள் உடனே அமலுக்கு வந்தன. அரசியல் கட்சியினரும் இப்போதே பொதுமக்களிடம் தங்கள் வாக்குகளை சேகரித்து வருகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலின் பொருட்டு அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி தேர்தல் கமிஷனும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டி உடுமலையில் தேர்தல் அலுவலர்கள் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். பஸ்களின் முன்புற கண்ணாடி, தாலுகா அலுவலக நுழைவு வாயில் பகுதி, அரசு மருத்துவமனை, நகராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகிறது.

இந்த ஸ்டிக்கர்களில் நேர் “மை” என்ற தலைப்பில் பணம் வாங்காமல் நேர்மையாக வாக்களிப்போம் என உறுதி கொள்வோம் என்ற வாசகமும், தவறா“மை” என்ற தலைப்பில் தவறாமல் வாக்களிப்பது வாக்காளர்களின் கடமை என்ற வாசகமும், ஒரு“மை” என்ற தலைப்பில் உரிமை கடமை ஒற்றுமை என்ற வாசகமும், வலி “மை”என்ற தலைப்பில் ஜனநாயகத்தின் வலிமை உங்கள் ஒவ்வொருவரின் ஓட்டிலும் உள்ளது என்ற வாசகமும் இடம் பெற்று உள்ளது.

முதல்“மை” என்ற தலைப்பில் 18 வயது நிரம்பிய இந்தியர்களின் கடமை என்ற வாசகமும், ஒற்று“மை” என்ற தலைப்பில் வேற்றுமை மறந்து ஒற்றுமையாக வாக்களிக்கும் நேரமிது என்ற வாசகமும், தனி ‘மை” என்ற தலைப்பில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களின் நிலைமை? என்ற வாசகமும், பொய்“மை” என்ற தலைப்பில் விற்கப்படும் ஒவ்வொரு வாக்கின் மையும் என்ற வாசகமும் உள்ளது.

இது போன்று எழுதப்பட்ட 13 வகையான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. இதுபோன்ற ஸ்டிக்கர்கள் ஒவ்வொரு பஸ்சிலும் ஏதாவது ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. இந்த ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியை தாசில்தார் தங்கவேல், ஸ்டிக்கர்களை பஸ்களின் கண்ணாடிகளில் ஒட்டி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நிலவருவாய் ஆய்வாளர் ரஞ்சித்குமார்,கிராம நிர்வாக அலுவலர் பரமேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இை- தொடர்ந்து தேர்தல் திருவிழா என்ற தலைப்பில் அனைவரும் வாக்களிப்பீர் என்ற துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் வினியோகித்தனர். 

Next Story