ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கருப்பு கொடி ஏந்தி கிராம மக்கள் போராட்டம் - கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு
கள்ளக்குறிச்சி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கருப்பு கொடி ஏந்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அருகே அணைக்கரைக்கோட்டாலம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டியும், நெற்பயிர் சாகுபடி செய்தும் வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரியும், கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, உயர்நிலைப்பள்ளிக்கு கூடுதல் கட்டிட வசதிகள் செய்து தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கருப்பு கொடி ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை அரசிடம் ஒப்படைத்து நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்தனர். இதுபற்றி அறிந்த சங்கராபுரம் தாசில்தார் பாண்டியன், வருவாய் ஆய்வாளர் அம்பிகா மற்றும் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்களின் கோரிக்கையை ஏற்காத கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இரவு நீண்ட நேரம் ஆனதால் கிராம மக்கள் தாங்களாகவே அங்கிருந்து கலைந்து சென்றனர். அப்போது அவர்கள், இரவு நேரமாகிவிட்டதால், நாங்கள் போராட்டத்தை கைவிட்டு செல்கிறோம். மீண்டும் நாளை(அதாவது இன்று) போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story