பதற்றமானவை என கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் - போலீசாருக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவு


பதற்றமானவை என கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் - போலீசாருக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவு
x
தினத்தந்தி 17 March 2019 11:57 PM GMT (Updated: 17 March 2019 11:57 PM GMT)

பதற்றமானவை என கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று போலீசாருக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம், 

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணிகள் மற்றும் நடத்தை விதிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பாக போலீசாருக்கான ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவதில் எந்தவித தொய்வும், பாகுபாடும் இருத்தல் கூடாது. அரசியல் கட்சியினர் தேர்தல் விதிமுறைகளை மீறுவதை தடுக்க மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா 3 பறக்கும் படை குழுக்களும், 3 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க வீடியோ கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் வருவாய்த்துறையுடன் போலீசாரும் இணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும். வேட்பு மனுதாக்கல் நேரங்களில் தேர்தல் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் அரசியல் கட்சியினர் உள்ளே வர முடியாதபடி போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும். வேட்பாளருடன் 5 பேருக்கு மேல் வராத அளவிற்கு அரசியல் கட்சியினரை கட்டுப்படுத்த வேண்டும்.

மாவட்டத்தில் 161 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும், 91 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதலாக போலீசாரை பணியில் ஈடுபடுத்தி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினரும் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களையும் செய்து கொடுக்க வேண்டும். தேர்தல் விதிகளை அமல்படுத்துவதில் எந்தவித தவறுக்கும் இடமளிக்காதவாறு முழுமையாக அமல்படுத்த வேண்டும். அமைதியை கெடுக்கும் வகையிலான செயலில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் மதுபான வகைகளை கொடுப்பதற்காக புதுச்சேரி மாநிலத்தில் இருந்து தமிழகம் வழியாக அதிலும் குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் வழியாக வாகனங்களில் கடத்திச்செல்வதை தடுக்க சிறப்பு கவனம் செலுத்தி 24 மணி நேரமும் சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு அதனை தடுக்க வேண்டும். தேர்தலை சிறப்பாகவும், அமைதியான முறையிலும் நடத்த போலீசார் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முகிலன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பிரபாகர் உள்பட அனைத்து உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்துகொண்டனர்.

Next Story