வெளிமாநில சுற்றுலா பயணிகளை குறிவைத்து கொடைக்கானலில் போதை காளான் விற்பனை? போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தீவிர கண்காணிப்பு
வெளிமாநில சுற்றுலா பயணிகளை குறிவைத்து கொடைக்கானலில் போதை காளான் விற்பனை செய்யப்படுகிறதா? என்று போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஆனிவிஜயா தலைமையில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக கொடைக்கானல் விளங்குகிறது. மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். அதுவும் கோடை காலம் தொடங்கிவிட்டால் கொடைக்கானலில் வெளிமாநில சுற்றுலா பயணிகளே அதிக அளவில் காணப்படுவார்கள்.
இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து சிலர் போதை காளான்களை விற்பனை செய்வதாக போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஆனிவிஜயாவுக்கு புகார் வந்தது. இதையடுத்து கொடைக்கானலில் போலீஸ் சூப்பிரண்டு ஆனிவிஜயா தலைமையில் கடந்த 3 நாட்களாக போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். திண்டுக்கல் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்த் உள்பட 6 போலீஸ் துணை சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 15 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 45 போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த போலீசார் கொடைக் கானல், வடகவுஞ்சி, மன்னவனூர், கிழாவரை, வட்டவடை ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் போதை காளான் வளர்க்கப்படுகிறதா? என திடீர் சோதனை நடத்தினர். கோடை காலத்தில் பெய்யும் சாரல் மழையின் போது மலைப்பகுதிகளில் போதை காளான் விளைச்சலாகும் என்பதால் அப்பகுதிகளில் சோதனை நடத்தினர். பின்னர் வெளிமாநில சுற்றுலா பயணிகள் தங்கியிருக்கும் தங்கும் விடுதிகளில் யாரேனும் அவர்களுக்கு போதை காளான் விற்பனை செய்கிறார்களா? என்று தீவிரமாக கண்காணித்தனர்.
அத்துடன் கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஓட்டல்களில் போதை காளான் ஆம்லெட் விற்பனை செய்யப்படுகிறதா? என்றும் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் சந்தேகப்படும்படி நபர்கள் யாரும் இதுவரை போலீசாரிடம் சிக்கவில்லை. ஒருவேளை போதை காளான் விற்பனை செய்வது தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story