வாக்குப்பதிவு ரசீதை பார்க்கவில்லையென்றால் தலைமை வாக்குச்சாவடி அலுவலரிடம் தெரிவிக்கலாம் சிவகங்கை கோட்டாட்சியர் தகவல்
தேர்தலில் வாக்களித்த பின்னர், வாக்குப்பதிவு ரசீதை பார்க்கவில்லையென்றால் தலைமை வாக்குச்சாவடி அலுவலரிடம் தெரிவிக்கலாம் என்று சிவகங்கை கோட்டாட்சியர் தெரிவித்தார்.
சிவகங்கை,
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படவுள்ளது. அத்துடன் புதியதாக, வாக்காளர் தான் யாருக்கு அளித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவி இதில் இணைக்கப்பட உள்ளது. இந்த எந்திரங்கள் தற்போது பொதுமக்கள் பார்வையிட்டு தெரிந்து கொள்ளும் வகையில், அதிகாரிகள் எந்திரங்களின் செயல் விளக்கத்தை செய்து காட்டி வருகின்றனர்.
சிவகங்கை நகர் பஸ்நிலையம் உள்பட மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வருவாய்த் துறை சார்பில், வாக்காளர் தாம் அளித்த வாக்கை உறுதி செய்யும் கருவி (விவிபிஏடி) இணைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல் விளக்கம், சிவகங்கை கோட்டாட்சியர் செல்வ குமாரி தலைமையில் நடைபெற்றது. இதில் தாசில்தார் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து கோட்டாட்சியர் கூறியதாவது:- இந்த முறை நடைபெறும் தேர்தலில், வாக்காளர் தாம் அளித்த வாக்கை யாருக்கு அளித்தோம் என உறுதி செய்யும் கருவி, ஓட்டுப்பதிவு கட்டுப்பாட்டு கருவி மற்றும் ஓட்டுப் பதிவு மின்னணு எந்திரத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும்.
வாக்காளர் ஓட்டு போடுவதற்கு முன்பு ஓட்டுப்பதிவு கட்டுப்பாட்டு கருவியில் உள்ள பட்டன் அழுத்தப்படும். அதன் பின்பு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் பச்சை விளக்கு எரிந்தவுடன், தாங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டுமோ, அந்த வரிசை எண்ணில் உள்ள பட்டனை அழுத்த வேண்டும். அப்போது அதன் அருகே உள்ள (விவிபிஏடி) கருவியில், வாக்காளர் யாருக்கு வாக்களித்தார்களோ அவர்களது சின்னம், பெயர், மற்றும் வரிசை எண் ஆகியவை கருவியில் பொருத்தப்பட்ட திரையில் 7 நொடிகள் பார்க்கலாம்.
இந்த ரசீதை பார்க்க மட்டுமே முடியும். இந்த ரசீது வாக்காளர்களுக்கு வழங்கப்படமாட்டாது. இதன் மூலம் வாக்காளர்கள் தாங்கள் தேர்வு செய்து வாக்களித்த வேட்பாளருக்கு தான், தங்களது வாக்கு செலுத்தப்பட்டு உள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளலாம். இந்த நிலையில் வாக்குப்பதிவு ரசீதை பார்க்கவில்லை என்றாலோ, எந்திரத்தில் சத்தமான பீப் என்ற ஒலிகேட்கவில்லை என்றாலோ தலைமை வாக்குச்சாவடி அலுவலரிடம் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story