பொள்ளாச்சி பாலியல் விவகாரம், ஐகோர்ட்டு மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை - ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்


பொள்ளாச்சி பாலியல் விவகாரம், ஐகோர்ட்டு மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை - ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 March 2019 11:00 PM GMT (Updated: 17 March 2019 11:58 PM GMT)

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை ஐகோர்ட்டு மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கோவையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவை, 

மத்திய பாரதீய ஜனதா அரசின் தவறான செயல்பாட்டினால் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் ஒட்டுமொத்த பொருளாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது. தொழில் மாவட்டமான கோவையில் சிறு குறுந்தொழில்கள் நசிந்துள்ளன.தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் சிறு, குறுந்தொழில்கூடங்கள் மூடப்பட்டு, 5 லட்சம் பேர் வேலையிழந்து உள்ளதாக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் ஐகோர்ட்டின் தீர்ப்பு வரவேற்புக்குரியது. ஆனால் தீர்ப்பு தொடர்பாக மாநில அரசு இதுவரை வாய் திறக்காமல் உள்ளது. இது தீர்ப்பை அவமதிக்கும் செயல்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். பொள்ளாச்சி விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். போராட்டம் நடத்துபவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும் போலீஸ், பாலியல் வன்முறை குற்றவாளிகளை கைது செய்வதிலும் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு விசாரணை திசைமாறி செல்கிறது. 2010-ம் ஆண்டு பள்ளிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரமுகர் வேலுசாமி கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடந்த 9 ஆண்டுகளாக விசாரணை நடைபெறாமல் உள்ளது. ஆளும் கட்சியினர் அதிகாரத்தை பயன்படுத்தி விசாரணையை திசை திருப்பும் போக்கு மாறவேண்டும்.

பாரதீய ஜனதா கட்சி, தமிழ்நாட்டில் போட்டியிடும் நாடாளுமன்ற தொகுதிகளில் படுதோல்வி அடையும். அ.தி.மு.க. அரசும் மக்கள் விரோத போக்குடன் செயல்படுவதால் அந்த கட்சியும் தோல்வி அடையும். மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் வெற்றியை தருவார்கள். இந்த கூட்டணி தேர்தலுக்காக உருவானது இல்லை. ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தி உள்ளோம்.

தேர்தல் முறைகேடு புகார்களை தடுக்க, ஓட்டு எண்ணும்போது ஒப்புகைசீட்டில் உள்ள வாக்குகளையும், வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளையும் ஒப்பிட்டு எண்ணி பார்க்க வேண்டும். குறைந்த பட்சம் ஒவ்வொரு தொகுதியிலும் 50 சதவீத வாக்குச்சாவடிகளில் இந்த முறையை கையாள வேண்டும் என்று தேர்தல் கமிஷனிடம் வலியுறுத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது உடன் இருந்த கோவை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் கூறும்போது, கோவை நகரில் சிறு குறு தொழில்கள் ஜி.எஸ்.டி. முறையால் நசிந்துவிட்டது. ஒரு பொருளை உற்பத்தி செய்த இடத்திலும் ஜி.எஸ்.டி. விதிக்கிறார்கள். விற்பனை செய்யும் இடத்திலும் ஜி.எஸ்.டி. விதிக்கிறார்கள். எனவே ஜி.எஸ்.டி.யை முறைப்படுத்துவோம்.

பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய தொடர்ந்து வலியுறுத்துவோம், என்றார்.

Next Story