காதலனுக்கு வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம்: கல்லூரி மாணவி தற்கொலை உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு


காதலனுக்கு வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம்: கல்லூரி மாணவி தற்கொலை உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 March 2019 4:30 AM IST (Updated: 18 March 2019 7:03 PM IST)
t-max-icont-min-icon

அணைக்கட்டு அருகே காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதனால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அணைக்கட்டு, 

வேலூர் மாவட்டம் அணைக்கட்டை அடுத்த மருதவள்ளிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் சுகுமார் (வயது 26), கடந்த 2 ஆண்டுகளாகதேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசில் தற்காலிகமாக வேலை செய்தார். அணைக்கட்டு மூலைகேட் பகுதியை சேர்ந்த கமலநாதன் என்பவரது மகள் வைஷ்ணவி (20). வேலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் சுகுமாரும், வைஷ்ணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி இருவீட்டாருக்கும் தெரியவந்தது. இதனையடுத்து சுகுமாரின் பெற்றோர் முறைப்படி கமலநாதன் வீட்டிற்கு சென்று வைஷ்ணவியை பெண் கேட்டுள்ளனர். அதற்கு பெண் வீட்டார் தரப்பில், வைஷ்ணவி கல்லூரியில் படித்து வருகிறார். 2 ஆண்டுகள் கழித்து பார்க்கலாம் என்று கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில் சுகுமாருக்கு மத்திய ரிசர்வ் போலீசில் வேலை கிடைத்ததால் டெல்லிக்கு சென்றுவிட்டார். இதனையடுத்து சுகுமாருக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்து வேறு இடத்தில் பெண் பார்த்து கடந்த வாரம் நிச்சயதார்த்தம் செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் வைஷ்ணவி கடந்த சில நாட்களாகவே மனமுடைந்து காணப்பட்டார்.

நேற்று முன்தினம் காலை வெகு நேரமாகியும் எழுந்திருக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக கமலநாதன் அணைக்கட்டு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை முடிந்து வைஷ்ணவியின் உடல் நேற்று காலை 10 மணிக்கு வீட்டிற்கு வந்தது. அவரது உறவினர்கள் வைஷ்ணவியின் சாவுக்கு காரணமான சுகுமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மூலைகேட் பகுதியில் உள்ள முக்கிய சாலை சந்திப்பில் சாலை மறியல் செய்யப்போவதாக அணைக்கட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையில் 30–க்கும் மேற்பட்ட போலீசார் மூலைகேட் சந்திப்பில் குவிந்தனர். போலீசார் குவிக்கப்பட்டதை அறிந்த உறவினர்கள் வைஷ்ணவியின் வீட்டின் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், காதல் தோல்வியால்தான் வைஷ்ணவி தற்கொலை செய்துகொண்டதாகவும், இதனால் சுகுமாரை கைது செய்ய வேண்டும் என்றும் கூறினர்.

மேலும் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story