வேலூர், குடியாத்தத்தில் காரில் எடுத்துச்சென்ற ரூ.3¾ லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
குடியாத்தத்தில் காரில் எடுத்துச்சென்ற ரூ.3¾ லட்சம் பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வேலூர்,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வேலூர் மாவட்ட எல்லை மற்றும் முக்கிய இடங்களில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் பறக்கும் படை தாசில்தார் ரூபிபாய் தலைமையில் அதிகாரிகள் நேற்று காலை 7 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில், ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் இருந்தது.
இதனையடுத்து பணம் கொண்டு வந்தவரிடம் நடத்திய விசாரணையில், காட்பாடி காந்திநகரை சேர்ந்த பிரசாத் (வயது 44) என்பதும், கட்டிட ஒப்பந்ததாரர் என்பதும் தெரியவந்தது. பிரசாத் தன்னிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க சென்னை கொண்டு சென்றதும் தெரியவந்தது. ஆனால் அவரிடம் பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அவர்கள் வேலூர் தாசில்தார் ரமேஷிடம் ஒப்படைத்தனர்.
இதே போல, கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படையை சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் ஆர்.எஸ்.சம்பத்குமார், போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பாபு, ஏட்டு கார்த்திகேயன் ஆகியோர் குடியாத்தம் – காட்பாடி ரோடு கீழ்ஆலத்தூர் கிராமம் அருகே நேற்று மாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காட்பாடி நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சம் இருந்தது. காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியபோது ஆரணி அடுத்த களம்பூர் பகுதியை சேர்ந்த அரிசி வியாபாரி சரவணன் என்பதும், இவர் குடியாத்தத்தில் அரிசி சப்ளை செய்த தொகை ரூ.1 லட்சத்தை கொண்டு சென்றதாக தெரிவித்தார். இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறக்கும் படையினர் கைப்பற்றி குடியாத்தம் தாசில்தார் சாந்தி மற்றும் அவரது குழுவினரிடம் ஒப்படைத்தனர்.