சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வாகன சோதனையில் ரூ.9.71 லட்சம் பறிமுதல்
சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.9 லட்சத்து 71 ஆயிரத்து 100 பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம்,
சேலம் உடையாப்பட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மாடுகளை ஏற்றி வந்த லாரியை நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதில் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த மாட்டு வியாபாரியான அன்பழகன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சம் எடுத்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
எடப்பாடி தாலுகா கொங்கணாபுரம் எட்டிகுட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் குமார் (37). இவர் ஆடு வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். நேற்று திருப்பூர் குன்னத்தூர் சந்தைக்கு ஆடுகளை சரக்கு வேனில் ஏற்றி சென்று விற்பனை செய்தார்.
விற்பனை ஆகாத ஆடுகளை வேனில் ஏற்றி சங்ககிரி நோக்கி வந்து கொண்டு இருந்தார். குப்பனூர் பைபாசில் மஞ்சக்கல்பட்டி பிரிவு ரோட்டில் வந்தபோது சங்ககிரி பறக்கும் படையினர் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது வேனில் வந்த குமார் எந்தவித ஆவணமும் இல்லாமல் ரூ.2 லட்சத்து 55 ஆயிரம் கொண்டு வந்தது தெரியவந்தது. அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் நாமக்கல் நாடாளுமன்ற தேர்தல் உதவி அலுவலர் அமிர்தலிங்கத்திடம் பணத்தை ஒப்படைத்தனர்.
தலைவாசல் அருகே நத்தக்கரை சுங்கச்சாவடி அருகில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி குணசேகரன் தலைமையில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், ஏட்டு வேல்முருகன் மற்றும் போலீசார் வாகன சோதனை செய்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த இப்ராஹீம் மகன் அப்துல்லா (23) என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் பெங்களூருவுக்கு எடுத்து சென்ற ரூ.91 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். அந்த பணத்தை கெங்கவல்லி தாசில்தார் சுந்தரராஜூவிடம் ஒப்படைத்தனர்.
சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட எடப்பாடி சட்டமன்ற தொகுதி நங்கவள்ளி பஸ்நிலையம் அருகில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் தாகூர் தலைமையில் அலுவலர்கள், போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் தாரமங்கலத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் வந்தார். அந்த காரில் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.56 ஆயிரத்து 100 இருந்தது தெரியவந்தது. அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை சேலம் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் இருந்து உத்தனப்பள்ளி செல்லும் சாலையில் உத்தனப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் தேர்தல் பிரிவு அலுவலர்கள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு ஜீப் வந்தது. அதிகாரிகள் அந்த ஜீப்பை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.3 லட்சத்து 56 ஆயிரத்து 500 கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அந்த ஜீப்பில் சென்றவர் கிருஷ்ணகிரி காந்தி நகரைச் சேர்ந்த செல்வராஜ் என தெரிய வந்தது. உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதே போல கெலமங்கலத்தில் இருந்து ஓசூர் செல்லும் சாலையில் பைரமங்கலம் கூட்டு ரோடு உள்ளது. இங்கு தளி வட்டார வளர்ச்சி அலுவலரும், பறக்கும் படை அலுவலருமான சீனிவாச சேகர், கெலமங்கலம் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் வீரகுமார் ஆகியோர் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. விசாரணையில் அந்த பணத்தை போடிச்சிப்பள்ளியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் எடுத்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பணம் தேன்கனிக்கோட்டை தாசில்தார் தங்கபாண்டி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முரளி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.