அம்மணி அம்மன் கோபுர கொடிமங்கை சிற்பத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை அதிகாரிகள் ஆய்வு இயற்கை முறையில் சரிசெய்ய நடவடிக்கை


அம்மணி அம்மன் கோபுர கொடிமங்கை சிற்பத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை அதிகாரிகள் ஆய்வு இயற்கை முறையில் சரிசெய்ய நடவடிக்கை
x
தினத்தந்தி 19 March 2019 4:30 AM IST (Updated: 18 March 2019 9:36 PM IST)
t-max-icont-min-icon

அருணாசலேஸ்வரர் கோவிலில் அம்மணி அம்மன் கோபுர கொடி மங்கை சிற்பத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள் பக்தர்கள் உள்ளே வருவதற்கு ராஜகோபுரம், திருமஞ்சன கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், பே கோபுரம் என 4 கோபுர வாசல்கள் உள்ளன. இதில் பே கோபுரம் தற்போது பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் 9 கோபுரங்கள் கொண்டதாகும்.

இந்த கோபுரங்களில் பல்வேறு சிற்பங்களால் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி சில இடங்களில் ஒரே கல்லில் பல சிற்பங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த கோவிலின் அம்மணி அம்மன் கோபுர வாசலின் கீழ் பகுதியில் 32 அடி உயரமுள்ள ஒரே கல்லில் கொடி மங்கை, முருகர் உள்பட பல்வேறு சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கொடி மங்கை சிற்பத்தின் மார்பு பகுதிக்கு மேலிருந்து இந்த கல்லை சுற்றி செல்லும் வகையில் விரிசல் விட்டு காணப்படுகிறது. இதனால் கோபுரத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் உள்பட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோவில் இணை ஆணையார் ஞானசேகர் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று சென்னையில் இருந்து இந்து சமய அறநிலையத் துறையின் கண்காணிப்பு பொறியாளர் கார்த்தியாயினி, உதவி கோட்ட பொறியாளர் மனோகர், ஓய்வுபெற்ற தொல்லியல் துறை அதிகாரி வசந்தி ஆகியோர் கொண்ட குழுவினர் விரிசல் ஏற்பட்ட கொடி மங்கை சிற்பத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் அவர்கள் கூறுகையில், அம்மணி அம்மன் கோபுரத்தின் கீழ் பகுதியில் உள்ள கொடி மங்கை சிற்பத்தில் விரிசல் ஏற்பட்டு உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த விரிசலினால் கோபுரத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை. இந்த விரிசலை இயற்கை முறையில் கடுக்காய், சுண்ணாம்பு போன்றவற்றின் மூலம் அடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது’ என்றனர்.

ஆய்வின் போது கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story