போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த 26 மோட்டார்சைக்கிள்கள் எரிந்து நாசம் சூளகிரி அருகே பரபரப்பு
சூளகிரி அருகே போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த 26 மோட்டார்சைக்கிள்கள் எரிந்து நாசம் ஆனது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த போலீஸ் நிலையம் அருகில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள்கள், கார்கள், ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் நேற்று போலீஸ் நிலையம் அருகில் உள்ள குப்பை கிடங்கில் தீப்பிடித்தது. இந்த தீ காற்றில் பரவி போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களிலும் பிடித்தது. தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் 26 மோட்டார்சைக்கிள்கள், 1 ஆட்டோ முற்றிலும் எரிந்து நாசம் ஆனது. இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் கடும் புகை மூட்டமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
போலீஸ் நிலையம் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீயில் எரிந்து நாசம் ஆன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story