தூத்துக்குடியில் போட்டியிட ஏராளமானவர்கள் வேட்புமனு வாங்கிச் சென்றனர்


தூத்துக்குடியில் போட்டியிட ஏராளமானவர்கள் வேட்புமனு வாங்கிச் சென்றனர்
x
தினத்தந்தி 19 March 2019 4:15 AM IST (Updated: 18 March 2019 11:06 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட ஏராளமானவர்கள் வேட்புமனு வாங்கிச் சென்றனர்.

தூத்துக்குடி, 

தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. அதன்படி தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விரும்புகிறவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரியிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்துக்குள் கார்கள் வருவதை தடுப்பதற்காக, எல்லைக் கோடுகள் வரைந்து தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் வேட்புமனுக்கள் கலெக்டர் அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இதனை நேற்று பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். வேட்பு மனுதாக்கல் காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை நடக்கிறது.

கடந்த தேர்தல்களில் வேட்பாளர்கள் சொத்து விவரம் மற்றும் வழக்குகள் விவரம் உள்ளிட்டவைகளுக்கு தனித்தனியாக அபிடவிட்டுகள் தாக்கல் செய்து வந்தனர். இந்த தேர்தலில் ஒரே அபிடவிட்டில் அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். 20 ரூபாய் பத்திரத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வேட்புமனுவுடன் குறிப்பிட்ட அளவு உள்ள புகைப்படம் சமர்ப்பிக்க வேண்டும். வேட்பு மனுவில் உள்ள எந்த பகுதியும் நிரப்பப்படாமலோ, கோடுகள் போட்டோ விடக்கூடாது.

மேலும் வருகிற 23, 24-ந் தேதி விடுமுறை நாள் ஆகும். ஆகையால் அன்றைய தினங்களில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

மேலும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கலும் இன்று(செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இந்த தொகுதிக்கான தேர்தல் அதிகாரியாக மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் அலுவலர் ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் வைத்து வேட்புமனுக்களை வாங்குகிறார். இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

Next Story