விழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட 15 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் 3 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்


விழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட 15 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் 3 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்
x
தினத்தந்தி 18 March 2019 11:30 PM GMT (Updated: 18 March 2019 7:15 PM GMT)

விழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட 15 டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு 3 கடைகளை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

விழுப்புரம், 

தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தட்டு, தேநீர் குவளை, தண்ணீர் குவளை, தண்ணீர் பாக்கெட், உறிஞ்சு குழல், கைப்பை, கொடி உள்பட 14 வகையான பொருட்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் அரசால் தடை விதிக்கப்பட்டு அந்த உத்தரவும் அமலுக்கு வந்துள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வந்த பிறகும் இன்னும் ஒரு சில கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வருவதாக எழுந்த புகாரின்பேரில் இதனை கண்காணிக்கும் வகையில் மாவட்டந்தோறும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடுக்க அதனை கண்காணித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடைகளில் நகராட்சி மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்கள், ஊரக வளர்ச்சி, வருவாய்த்துறை அதிகாரிகள் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விழுப்புரம் நகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா தலைமையில் கோட்டாட்சியர் குமாரவேல், தாசில்தார் பிரபுவெங்கடேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் 3 குழுக்களாக பிரிந்து விழுப்புரம் காமராஜர் வீதி, எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது காமராஜர் வீதியில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 8 டன் எடையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் அந்த கடை உரிமையாளரின் உறவினர் கடைகளான எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதியில் உள்ள 2 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 7 டன் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து அந்த 3 கடைகளையும் அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர். இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா கூறுகையில், மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட் களை பயன்படுத்தக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை கண்காணித்து தடுக்க தவறும் அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story