நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும் பொன்முடி எம்.எல்.ஏ. பேச்சு
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்று பொன்முடி எம்.எல்.ஏ. பேசினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் (வடக்கு) செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ., அங்கையற்கண்ணி (தெற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பொன்.கவுதமசிகாமணி, விழுப்புரம் (தனி) தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் துரை.ரவிக்குமார் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து பொன்முடி எம்.எல்.ஏ. பேசியதாவது:-
தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. அதற்கு நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். நம்முடைய தேர்தல் களப்பணி சிறப்பாக இருக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய நேரம் இது என்பதை மறந்து விடக்கூடாது. அந்தந்த ஊர்களில் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி தோழர்களை அரவணைத்து பணி செய்ய வேண்டும்.
எந்த சோதனை வந்தாலும் மனம் தளராமல் வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு பணியாற்ற வேண்டும். இந்த தேர்தலோடு 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நாம் வெற்றி பெற்றுவிட்டால் நிச்சயமாக இந்த தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி இருக்காது. மு.க.ஸ்டாலின்தான் அடுத்த முதல்-அமைச்சர். ஆகவே நமது பிரசாரம் சிறப்பாக இருக்க வேண்டும். இன்றைக்கே சுவர்களில் இடம்பிடித்து உதயசூரியன் சின்னத்தை வரைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் சீத்தாபதி சொக்கலிங்கம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. சபாபதிமோகன், மாவட்ட பொருளாளர் புகழேந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் ஜெயச்சந்திரன், மைதிலி ராஜேந்திரன் மற்றும் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர்கள் ஆர்.டி.வி. சீனிவாசக்குமார், ஆர்.பி.ரமேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன், மாவட்ட செயலாளர்கள் ஆற்றலரசு, பாமரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக தியாகதுருகத்திற்கு வந்த கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கவுதமசிகாமணி, பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மவுண்ட் பார்க் பள்ளி தாளாளர் மணிமாறன், தியாகதுருகம் வடக்கு ஒன்றிய செயலாளர் திம்மலை நெடுஞ்செழியன், நகர செயலாளர் பொன்.ராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story