கடலூர் அருகே ஒப்பந்ததாரரிடம் ரூ.4 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
கடலூர் அருகே ஒப்பந்ததாரரிடம் இருந்து ரூ.4 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
குறிஞ்சிப்பாடி,
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி சிவா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஏட்டுகள் பத்மநாபன், தரணிதரன், சம்பத்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று கடலூர் அருகே உள்ள செல்லங்குப்பத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி வந்த ஒரு சொகுசு காரை, அதிகாரிகள் நிறுத்தி, சோதனை செய்தனர்.
மேலும் காரில் வந்த அதன் உரிமையாளர் காட்டுமன்னார்கோவில் ஓமாம்புலியூர் ரோட்டை சேர்ந்த ஒப்பந்ததாரர் கே.எஸ்.கே. வேல்முருகன்(வயது 38), மற்றும் கார் டிரைவர் காட்டுமன்னார் கோவில் அருகே திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மகன் வெற்றிவேல் ஆகியோரின் உடைமைகளை சோதனை செய்தனர்.
அதில், கே.எஸ்.கே. வேல் முருகன் வைத்திருந்த பையில், ரூ. 4 லட்சம் இருந்ததை பறக்கும் படையினர் கண்டுபிடித்தனர். மேலும் இது தொடர்பாக அவரிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர், குறிஞ்சிப்பாடி தாசில்தார் உதயகுமாரிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் நேற்று முன்தினம் குறிஞ்சிப்பாடி அருகே இஸ்மாயில் என்கிற ஜவுளி வியாபாரியிடம் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 800 ரூபாயை பறக்கும் படை அதிகாரி சிவா தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்து இருந்தனர். இதை தொடர்ந்து நேற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Related Tags :
Next Story