புதுச்சத்திரம் அருகே விவசாயி அடித்துக்கொலை தந்தை கைது


புதுச்சத்திரம் அருகே விவசாயி அடித்துக்கொலை தந்தை கைது
x
தினத்தந்தி 19 March 2019 3:45 AM IST (Updated: 19 March 2019 1:53 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சத்திரம் அருகே விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல், 

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள தாத்தையங்கார்பட்டி குட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் சின்னண்ண கவுண்டர் (வயது 85). இவரது மகன் பெரியசாமி (57). விவசாயி. இவருக்கு சாந்தி என்ற மனைவியும், தினேஷ்குமார் (27) என்ற மகனும் உள்ளனர். என்ஜினீயரிங் முடித்துள்ள தினேஷ்குமார், கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த வாரம் தினேஷ்குமாருக்கு திருமணம் செய்து வைத்தனர். நேற்று முன்தினம் புதுமண தம்பதிகளை தனி குடித்தனம் வைப்பதற்காக இருவரையும் அழைத்து கொண்டு சாந்தி கோவைக்கு சென்று விட்டார். இதற்கிடையே நேற்று காலையில் வழக்கம்போல் தோட்டத்திற்கு வரும் பெரியசாமி வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவர்கள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்து உள்ளனர். அப்போது பெரியசாமி படுகொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது குறித்து உடனடியாக புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு விரைந்து சென்ற நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி, புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் பெரியசாமியின் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையின்போது பெரியசாமி அவரது தந்தைக்கு செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்து வந்ததும், அவர்களுக்கு இடையே சொத்து பிரித்து கொடுத்ததில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும் தெரியவந்தது. நேற்று முன்தினமும் இருவருக்கும் இடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. பின்னர் பெரியசாமி தூங்கிவிட்டார். ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த சின்னண்ண கவுண்டர், தூங்கி கொண்டு இருந்த பெரியசாமியை கட்டையால் அடித்து கொலை செய்து இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து இச்சம்பவம் குறித்து பெரியசாமியின் உறவினர் குமாரசாமி கொடுத்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னண்ண கவுண்டரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையே மகனை அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story