அரசு கட்டிடம் அருகே தாழ்வாக பறந்த ஹெலிகாப்டரால் பரபரப்பு
வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே உள்ள அரசு கட்டிடத்தின் மீது தாழ்வாக ஹெலிகாப்டர் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வண்டலூர்,
சென்னை அடுத்த வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் நேற்று காலை 11.50 மணி அளவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஒரு ஹெலிகாப்டர் மிகவும் தாழ்வான நிலையில் பறந்து கொண்டிருந்தது.
இதனை பார்த்த வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சாலையில் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்திவிட்டு தங்களது செல்போனில் ஹெலிகாப்டர் பறப்பதை படம் பிடித்துக் கொண்டிருந்தனர். தாழ்வாக பறந்த அந்த ஹெலிகாப்டர் திடீரென வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே அமைந்துள்ள உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கல்வி நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள 3 மாடி கட்டிடத்தின் மேல் பகுதியில் நீண்ட நேரமாக பறந்து கொண்டிருந்தது.
இதனால் பொதுமக்கள் அந்த கட்டிடத்தின் நுழைவு வாயிலில் பெருமளவில் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர். அப்போது அந்த ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் 10–க்கும் மேற்பட்ட வீரர்கள் உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவன கட்டிடத்தின் மாடியில் இறங்கினார்கள்.
இதனால் அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. தாம்பரத்தில் உள்ள விமானப்படை தளத்திலிருந்து பயிற்சி பெறும் வீரர்கள் இந்த கட்டிடத்தின் மீது ஹெலிகாப்டரில் பயிற்சி எடுத்தார்களா? அல்லது கொளப்பாக்கத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் ஹெலிகாப்டரில் இருந்து கட்டிடத்தில் இறங்கி பயிற்சி எடுத்தார்களா? என்பது பற்றி இன்னும் விவரம் தெரியவில்லை. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.