மோட்டார்சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் அரிவாளை காட்டி மிரட்டிய வாலிபர்கள்


மோட்டார்சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் அரிவாளை காட்டி மிரட்டிய வாலிபர்கள்
x
தினத்தந்தி 19 March 2019 4:56 AM IST (Updated: 19 March 2019 4:56 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார்சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் அரிவாளை காட்டி மிரட்டிய வாலிபர்களின் செயல் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


அனுப்பர்பாளையம்,

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை அடுத்த ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவு ஹெல்மெட் அணிந்த 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் நிரப்புவதற்காக அங்கு வந்துள்ளனர். பின்னர் அங்கு பணியில் இருந்த ஊழியரிடம் ரூ.600-க்கு பெட்ரோல் நிரப்புமாறு கூறியுள்ளனர். இதையடுத்து ஊழியரும் ரூ.600-க்கு பெட்ரோல் நிரப்பி விட்டு அந்த வாலிபர்களிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளின் பின்புறம் உட்கார்ந்திருந்த வாலிபர் பணத்தை எடுப்பது போல் பாசாங்கு செய்தார்.

ஆனால் திடீரென அவர் வைத்திருந்த பையில் இருந்து அரிவாளை எடுத்து பங்க் ஊழியரை வெட்டுவது போல் கையை ஓங்கினார். இதனால் பயந்து போன ஊழியர் அங்கிருந்து சிறிது தூரம் ஓடி விட்டார். இதையடுத்து அந்த வாலிபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சாமிநாதன் கொடுத்த புகாரின் பேரில் பெருமாநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அரிவாளை காட்டி மிரட்டி விட்டு சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Next Story