சிவமொக்காவில் மீண்டும் நீயா?, நானா? போட்டியில் முன்னாள் முதல்-மந்திரிகளின் மகன்கள்
சிவமொக்காவில் மீண்டும் நீயா?, நானா? போட்டியில் முன்னாள் முதல்-மந்திரிகளின் மகன்களான ராகவேந்திராவும், மது பங்காரப்பாவும் தேர்தல் களத்தில் இறங்கி உள்ளனர்.
சிவமொக்கா,
கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களை முன்னிறுத்தி வாக்கு சேகரித்து வருகிறார்கள். அந்த வகையில் சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதாவின் வேட்பாளராக பா.ஜனதாவின் மாநில தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பாவின் மகனும், தற்போது நாடாளுமன்ற உறுப்பினருமான ராகவேந்திரா பா.ஜனதா சார்பில் களம் காண்கிறார்.
அவரை எதிர்த்து முன்னாள் முதல்-மந்திரி பங்காரப்பாவின் மகன் மது பங்காரப்பா ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கூட்டணியில் சிவமொக்கா தொகுதி ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு(2018) சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார். அதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. அப்போது பா.ஜனதா சார்பில் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா களத்தில் குதித்தார்.
அவரை எதிர்த்து மது பங்காரப்பா போட்டியிட்டார். ஆனால் ராகவேந்திரா 52,148 வாக்குகள் வித்தியாசத்தில் மது பங்காரப்பாவை தோற்கடித்து வெற்றிபெற்றார். முன்னதாக 2009-ம் ஆண்டும் சிவமொக்கா தொகுதியில் ராகவேந்திரா போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 3-வது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகும் முயற்சியில் ராகவேந்திரா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவரை எதிர்த்து போட்டியிடும் மது பங்காரப்பாவுக்கும் சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதியில் அதிக அளவில் ஆதரவு இருக்கிறது. மது பங்காரப்பா ஈடிகா இனத்தைச் சேர்ந்தவர். அவர் சார்ந்த சமுதாய மக்கள் அதிக அளவில் உள்ளனர். இருப்பினும் சிவமொக்கா தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் வீரசைவ-லிங்காயத் சமுதாய மக்கள் பெரும்பாலும் பா.ஜனதாவுக்கே ஆதரவு அளித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதி இதுவரையில் 17 நாடாளுமன்ற தேர்தல்களை சந்தித்துள்ளது. அதில் அதிகபட்சமாக காங்கிரஸ் 10 முறை வெற்றிபெற்று இருக்கிறது. பா.ஜனதா 5 முறை வெற்றிக்கனியை ருசித்துள்ளது.
கடந்த 1999-ம் ஆண்டு வரை காங்கிரசின் கோட்டையாக திகழ்ந்து வந்த சிவமொக்கா தொகுதி 2004-ம் ஆண்டு முதல் பா.ஜனதா பக்கம் திரும்பியது. 1999-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பங்காரப்பா, 2004-ம் ஆண்டு பா.ஜனதாவில் சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை எதிர் கொண்டார். அப்போது முதல் சிவமொக்கா தொகுதியில் பா.ஜனதா தனது தடத்தை பதித்தது. அதன்பிறகு அத்தொகுதியில் எடியூரப்பாவும், அவருடைய மகன் ராகவேந்திராவும் மாறி, மாறி போட்டியிட்டு வெற்றிவாகை சூடி வருகிறார்கள்.
எதுவாக இருந்தாலும் நடக்கப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் நீயா?, நானா? போட்டியில் ஈடுபட்டுள்ள இந்த முன்னாள் முதல்-மந்திரிகளின் மகன்களில் யார் வெற்றிவாகை சூடுவார் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.