பி.கே.சி.- சுன்னாப்பட்டி பறக்கும் சாலை ஜூலை மாதம் திறக்கப்படும் : அதிகாரி தகவல்


பி.கே.சி.- சுன்னாப்பட்டி பறக்கும் சாலை ஜூலை மாதம் திறக்கப்படும் : அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 19 March 2019 5:38 AM IST (Updated: 19 March 2019 5:38 AM IST)
t-max-icont-min-icon

பி.கே.சி.- சுன்னாப்பட்டி பறக்கும் சாலை ஜூலை மாதம் திறக்கப்படும் என அதிகாரி கூறியுள்ளார்.

மும்பை, 

அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி பல்வேறு தனியார், பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் மும்பை பாந்திரா குர்லா காம்ப்ளக்சில்(பி.கே.சி.) அமைந்து உள்ளது. எனவே பி.கே.சி.யில் இருந்து கிழக்கு விரைவு சாலைக்கு எளிதில் செல்லும் வகையில் சுன்னாப்பட்டி வரை ரூ.200 கோடி செலவில் பறக்கும் சாலை அமைக்கும் பணியில் மும்பை பெருநகர வளர்ச்சி குழுமம் (எம்.எம்.ஆர்.டி.ஏ.) ஈடுபட்டு வருகிறது.

1.6 கி.மீ. தூரம் உள்ள இந்த சாலை பி.கே.சி. ‘ஜி’ பிளாக் பகுதியில் தொடங்கி சுன்னாப்பட்டி சோமையா மைதானத்தில் முடிகிறது.

இந்த திட்டத்துக்காக சயான்- குர்லா இடையே உள்ள ரெயில்பாதை மீது மேம்பாலம் வருகிறது. மேம்பாலம் அமைக்கும் பணிக்காக ரெயில் பாதை மீது ராட்சத இரும்பு சட்டங்கள் வைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், ஏற்கனவே 4 இரும்பு சட்டங்கள் வைக்கும் பணி முடிந்துவிட்டது. இன்னும் 2 சட்டங்கள் வைக்க வேண்டும். அந்த பணி வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

இதையடுத்து துறைமுக ரெயில் வழிப்பாதை மீதும் மேம்பால பணிக்காக இரும்பு சட்டம் வைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் முடிந்து வருகிற ஜூலை மாதம் பி.கே.சி.- சுன்னாப்பட்டி பறக்கும் சாலை திறக்கப்படும் என எம்.எம்.ஆர்.டி.ஏ. அதிகாரி ஒருவர் கூறினார்.

தற்போது பி.கே.சி.யில் இருந்து சுன்னாப்பட்டி செல்ல 30 நிமிடங்கள் ஆகிறது. பறக்கும் சாலை திறக்கப்பட்டால் 10 நிமிடங்களில் பி.கே.சி.யில் இருந்து சுன்னாப்பட்டி சென்றுவிட முடியும்.

Next Story