மராட்டியத்தில் முதல்கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது


மராட்டியத்தில் முதல்கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது
x
தினத்தந்தி 19 March 2019 5:41 AM IST (Updated: 19 March 2019 5:41 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் முதல்கட்ட நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் 7 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. 2-ம் கட்டமாக 10 தொகுதிகளுக்கான மனு தாக்கல் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

மும்பை,

மராட்டியத்தில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

நாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி மே மாதம் 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

மராட்டியத்தில் மொத்தம் உள்ள 48 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 4 கட்டமாக தேர்தல் நடக்கிறது. ஏப்ரல் 11, 18, 23, 29 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.

முதல்கட்டமாக ஏப்ரல் 11-ந் தேதி வார்தா, ராம்டெக், நாக்பூர், பண்டாரா- கோண்டியா, கட்சிரோலி-சிமூர், சந்திராப்பூர், யவத்மால்-வாசிம் ஆகிய 7 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.

இந்த முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.

தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் நபருடன் 4 பேர் மட்டுமே அலுவலகத்துக்குள் வர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.

மேலும் அந்த அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

முதல் நாளில் முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யவில்லை. இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வேட்பு மனு தாக்கல் சூடுபிடிக்கும் என்று தெரிகிறது.

2-ம் கட்டமாக ஏப்ரல் 18-ந் தேதி புல்தானா, அகோலா, அமராவதி, ஹிங்கோலி, நாந்தெட், பர்பானி, பீட், உஸ்மனாபாத், லாத்தூர், சோலாப்பூர் ஆகிய 10 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

இந்த தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று(செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

2-ம் கட்ட தேர்தலில் மனு தாக்கல் செய்யவேண்டிய கடைசி நாள் வருகிற 26-ந் தேதி ஆகும். மனு மீதான பரிசீலனை 27-ந் தேதி நடைபெறுகிறது. மனுவை வாபஸ் பெற கடைசி நாள் வருகிற 29-ந் தேதி ஆகும்.

2 கட்டங்களிலும் 17 தொகுதிகளிலும் தேர்தல் தேதி நெருங்குவதால் மராட்டிய தேர்தல் களம் விறுவிறுப்பை எட்டி உள்ளது.

மேற்கண்ட தொகுதிகளை குறிவைத்து தலைவர்கள் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். 

Next Story