தி.மு.க.–கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திருவாரூரில் இருந்து இன்று முதல் மு.க.ஸ்டாலின் பிரசாரம் தொடக்கம்


தி.மு.க.–கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திருவாரூரில் இருந்து இன்று முதல் மு.க.ஸ்டாலின் பிரசாரம் தொடக்கம்
x
தினத்தந்தி 19 March 2019 11:00 PM GMT (Updated: 19 March 2019 4:09 PM GMT)

நாடாளுமன்ற, சட்டசபை தொகுதியில் போட்டியிடும். தி.மு.க.–கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திருவாரூரில் இருந்து இன்று முதல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்குகிறார்.

திருவாரூர்,

தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம்(ஏப்ரல்) 18–ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் சேர்த்து நடத்தப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் போட்டியிடும் தொகுதிகள் குறித்து அ.தி.மு.க., தி.மு.க. உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற ஜனநாயக கூட்டணியில் 20 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது. அதன் கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.


திருவாரூரில் இருந்து இன்று(புதன்கிழமை) காலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தனது வீட்டில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு திருவாரூர் நகருக்கு வரும் மு.க.ஸ்டாலின் வரும் வழியில் மக்களை சந்தித்து திருவாரூர் தொகுதி வேட்பாளர் பூண்டி கே.கலைவாணன், நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் செல்வராசு ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

இதனை தொடர்ந்து திருவாரூரில் இருந்து காரில் புறப்பட்டு மணக்கால், திருக்காரவாசல் ஆகிய இடங்களில் விவசாயிகள், பெண்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து வாக்கு கேட்கிறார்.


இதனையடுத்து காலை 10 மணிக்கு திருவாரூர்–நாகை புறவழிச் சாலையில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி ஆதரவு திரட்டுகிறார். கூட்டத்திற்கு பின்னர் மீண்டும் சன்னதி தெருவில் உள்ள தனது வீட்டிற்கு செல்கிறார். அங்கு ஓய்வெடுக்கும் அவர் மாலையில் திருவாரூரில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர் செல்கிறார்.

அங்கு நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு தஞ்சை தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தஞ்சை சட்டசபை தொகுதி வேட்பாளர் டி.கே.ஜி.நீலமேகம் ஆகியோருக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார். கூட்டத்தை முடித்துக்கொண்டு ஸ்டாலின் தஞ்சையில் தங்குகிறார்.

Next Story