திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ‘விவிபேட்’ எந்திரம் குறித்து வாக்காளர்களுக்கு விளக்கம்


திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ‘விவிபேட்’ எந்திரம் குறித்து வாக்காளர்களுக்கு விளக்கம்
x
தினத்தந்தி 19 March 2019 11:00 PM GMT (Updated: 19 March 2019 7:28 PM GMT)

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ‘விவிபேட்’ எந்திரம் குறித்து வாக்காளர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

திருச்சி,

இந்தியாவில் 17-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் சுமார் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக நாடு முழுவதும் 10 லட்சத்து 35 ஆயிரம் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், வெளிப்படை தன்மையுடன் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்வதற்காகவும் தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தேர்தலின் போதும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் இந்த தேர்தலில், வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்வதற்காக மின்னணு வாக்குப் பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு கருவி ஆகியவற்றுடன் ‘விவிபேட்’ என்ற புதிதாக பிரிண்டிங் எந்திரம் ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் வைக்கப்பட இருக்கிறது. வாக்குச்சாவடிக்குள் வரும் வாக்காளர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தான் விரும்பிய சின்னத்தில் வாக்களித்த பின்னர் இந்த ‘விவிபேட்’ எந்திரத்தை பார்த்தால் அதில் வாக்களித்த சின்னம் மற்றும் எண்ணுடன் கூடிய ரசீது அச்சாகி வெளியே தெரியும். 7 வினாடிகளுக்குள் அந்த ரசீதை வாக்காளர் பார்த்து உறுதி செய்து கொள்ள முடியும்.

ஆனால் அதை வெளியே எடுக்க முடியாது. அந்த எந்திரத்திற்குள்ளேயே சேமிக்கப்பட்டுவிடும். வாக்கு எண்ணிக்கையின் போது சந்தேகம் ஏற்பட்டால், அந்த நேரத்தில் ‘விவிபேட்’ எந்திரத்தினுள் சேமிக்கப்பட்டுள்ள அந்த ரசீதுகளை கூட்டி, சந்தேகத்தை தீர்க்கலாம்.

இந்த ‘விவிபேட்’ எந்திரத்தின் செயல்பாடு பற்றி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் தரை தளத்தில் விளக்கம் அளிக்கும் மையம் கடந்த 1-ந்தேதியில் இருந்து செயல்பட்டு வருகிறது.

தினமும் சுமார் 70 முதல் 80 வாக்காளர் வரை இந்த எந்திரத்தில் தங்களது வாக்கினை பதிவு செய்து அதன் செயல்பாடு பற்றிய விவரங்களை அறிந்து வருகிறார்கள். விரைவில் இந்த எந்திரத்தை பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் வைத்து செயல் முறை விளக்கம் அளிக்க தேர்தல் பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். 

Next Story