ஊருக்குள் புகுந்த காட்டு பூனையால் பரபரப்பு - வனப்பகுதியில் விடப்பட்டது


ஊருக்குள் புகுந்த காட்டு பூனையால் பரபரப்பு - வனப்பகுதியில் விடப்பட்டது
x
தினத்தந்தி 20 March 2019 4:15 AM IST (Updated: 20 March 2019 1:25 AM IST)
t-max-icont-min-icon

ஊருக்குள் காட்டு பூனைக்குட்டி புகுந்தது. அது சிறுத்தைப்புலி குட்டியாக இருக்கலாம் என பொது மக்கள் அச்சம் அடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கூடலூர்,

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கோழிப்பாலம் பள்ளிப்பாடி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி அப்துல் அஜீஷ். இவர் தூங்கி எழுந்த உடன் நேற்று காலையில் தனது வீட்டு வளாகத்தில் நடந்து கொண்டிருந்தார். அப்போது தண்ணீர் தொட்டி அருகே வனவிலங்கு ஒன்று சத்தம் போடுவதை கேட்டார். இதையடுத்து அருகே சென்று பார்த்தார். அப்போது அந்த விலங்கு அவரை பார்த்ததும் சீறியது.

இதனால் சிறுத்தைப்புலி குட்டியாக இருக்கலாம் என அச்சம் அடைந்தார். மேலும் இந்த தகவல் அப்பகுதி முழுவதும் காட்டுத்தீ போல வேகமாக பரவியது. இதையடுத்து பொதுமக்கள் சிறுத்தைப்புலியை காண அங்கு திரண்டனர். மேலும் அப்பகுதியில் சிறுத்தைப்புலி பதுங்கி இருக்கலாம் என அனைவரும் அச்சம் அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் வனச்சரகர் ராமகிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் சிறுத்தைப்புலி குட்டியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். பின்னர் பல கட்டங்களாக போராடி சிறுத்தைப்புலிக்குட்டி பிடிக்கப்பட்டது. தொடர்ந்து கூடலூர் ஈட்டிமூலா வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வனத்துறையினர் ஆய்வு நடத்திய போது பிடிபட்டது காட்டு பூனைக்குட்டி என தெரியவந்தது. இது குறித்து பொதுமக்களிடம் வனத்துறையினர் விளக்கம் அளித்தனர்.

இதுகுறித்து வனச்சரகர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:-

சிறுத்தைப்புலிக்குட்டி வந்துள்ளதாக பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதனால் நேரில் சென்று அந்த குட்டி பிடிக்கப்பட்டது. அதன் காலில் லேசான காயம் உள்ளது. ஆனால் அது சிறுத்தைப்புலிக்குட்டி அல்ல. பிறந்து 6 மாதங்கள் மட்டுமே ஆன காட்டு பூனைக்குட்டி. உடனடியாக வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது. எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடைய பள்ளிப்பாடி பகுதி மக்கள் கூறியதாவது:-

கடந்த பிப்ரவரி மாதம் பாட்டவயல் பகுதியில் ராயன் என்பவரது வீட்டுக்குள் சிறுத்தைப்புலி பதுங்கி இருந்தது. தற்போது கோடை வறட்சியாக இருப்பதால் பெரும்பாலான இடங்களில் காட்டுத்தீ பரவி வருகிறது. இதனால் வனவிலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன.

இதேபோல் தாயுடன் வந்த சிறுத்தைப்புலிக்குட்டி வழி மாறி குடியிருப்பு பகுதிக்கு வந்து விட்டது என அச்சம் அடைந்தோம். ஆனால் காட்டு பூனைக்குட்டி என வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story