பொள்ளாச்சி பாலியல் வன்முறை தொடர்பான வீடியோ காட்சி அடங்கிய சி.டி.யுடன் மாதர் சங்கத்தினர் புகார்
பொள்ளாச்சி பாலியல் வன்முறை தொடர்பான வீடியோ காட்சி அடங்கிய சி.டி.யுடன் மாதர் சங்கத்தினர் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து புகார் அளித்தனர்.
கோவை,
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க கோவை மாவட்ட செயலாளர் ராதிகா தலைமையில் நிர்வாகிகள் கோவை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபனை சந்தித்து, பொள்ளாச்சி பாலியல் வன்முறை தொடர்பாக தங்களுக்கு கிடைத்த 4 வீடியோ காட்சிகளை சி.டி.யில் பதிவு செய்து கொடுத்தனர். மேலும் அவர்கள், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது-
பொள்ளாச்சியை சேர்ந்த சபரிராஜன், மாக்கினாம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் மற்றும் சிலர் பல பெண்களுடன் பழகி ஏமாற்றி தனியாக அழைத்து சென்று மிரட்டியும், அடித்தும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி உள்ளனர். ஆபாச வீடியோ எடுத்து வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவோம் என மிரட்டி பணம், நகைகளை பறித்தும் வந்துள் ளனர்.
எங்களுக்கு கிடைத்த 4 வீடியோ காட்சிகள் பதிவு செய்யப்பட்ட சி.டி.யை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டிடம் சமர்பித்துள்ளோம். தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த பெண் சம்பந்தப்பட்ட வழக்கை மட்டும் விசாரித்து வருகின்றனர். நாங்கள் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.
பொள்ளாச்சி போலீசார் கடந்த மாதம் 25-ந் தேதி கைது செய்த 3 பேரை, 15 நாட்களுக்குள் காவலில் எடுத்து விசாரிக்காமல் காலதாமதம் செய்ததால் அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க முடியாமல் போய் விட்டது. ஒருவரை மட்டும் காவலில் எடுத்து விசாரித்ததும் இந்த வழக்கிற்கு பாதகமாக அமைந்துள்ளது.
எனவே எங்களுடைய புகாரில் உள்ள 4 வீடியோக்களின் அடிப்படையில் புதிய வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் காவலில் எடுத்து விசாரித்தால் பல்வேறு உண்மைகள் வெளிவரும். குற்றவாளிகளுக்கு தக்க தண்டனையை வாங்கி கொடுக்க முடியும் என நம்புகிறோம்.
தவறும் பட்சத்தில், நீதி கிடைக்க ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்படும். இந்த கும்பலால் நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொள்ளாச்சி பகுதியில் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்கள், மாணவிகள் குறித்து கணக்கெடுத்து மறு விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story