நாடாளுமன்ற தேர்தல், ஆம்புலன்ஸ் வாகனங்களில் சோதனை நடத்தப்படும் - கலெக்டர் பேட்டி


நாடாளுமன்ற தேர்தல், ஆம்புலன்ஸ் வாகனங்களில் சோதனை நடத்தப்படும் - கலெக்டர் பேட்டி
x
தினத்தந்தி 19 March 2019 10:45 PM GMT (Updated: 19 March 2019 8:17 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஆம்புலன்ஸ் வாகனங்களில் சோதனை நடத்தப்படும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேட்டி அளித்தார்.

ஊட்டி,

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது. நீலகிரி (தனி) நாடாளுமன்ற தொகுதியில் ஊட்டி, குன்னூர், கூடலூர்(தனி), மேட்டுப்பாளையம், அவினாசி(தனி), பவானிசாகர்(தனி) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

நீலகிரி (தனி) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை நீலகிரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான இன்னசென்ட் திவ்யா மற்றும் முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஊட்டி வருவாய் கோட்டாட்சியரிடம் தாக்கல் செய்யலாம்.

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தேர்தல் அறிவிப்பை தகவல் பலகையில் ஒட்டினார். அதில் தமிழ், ஆங்கிலம், மலையாள மொழிகளில் விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீலகிரி (தனி) நாடாளுமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் இன்று(நேற்று) முதல் தொடங்கி உள்ளது. வேட்பாளர்கள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்ய வருகிறவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும். மேலும் மூன்று வாகனங்கள் மட்டும் நுழைவுவாயில் வரை அனுமதிக்கப்படும். வேட்பாளருடன் 4 நபர்கள் மட்டும் மனுத்தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

வருகிற 26-ந் தேதி மதியம் 3 மணி வரை (அரசு விடுமுறை நாட்களை தவிர) வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். 27-ந் தேதி வேட்புமனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 28 மற்றும் 29-ந் தேதிகளில் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் 44 நபர்களிடம் ரூ.1 கோடியே 41 லட்சம் பறிமுதல் செய்து உள்ளனர். இதில் 12 பேருக்கு ரூ.16 லட்சத்து 80 ஆயிரம் திரும்ப வழங்கப்பட்டு உள்ளது. கூடலூர் (தனி) சட்டமன்ற தொகுதி கேரளா, கர்நாடகா மாநில எல்லைகளை ஒட்டி அமைந்து உள்ளதால், கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தேர்தல் பறக்கும் படையினர் ஆம்புலன்ஸ் வாகனங்களையும் சோதனை செய்வார்கள். மேலும் அமரர் ஊர்திகளிலும் சோதனையில் ஈடுபடுவார்கள். நீலகிரி(தனி) நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் செலவு கணக்கு பார்வையாளராக மும்பை வருமான வரித்துறை ஆணையர் தாக்குலின் கிப்ஜென் நியமிக்கப்பட்டு உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித் சிங், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். வேட்புமனு தாக்கல் தொடங்கியதை அடுத்து, கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் இருந்து 100 மீட்டர் தூரம் 3 இடங்களில் குறிக்கப்பட்டது. அப்பகுதிகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Next Story