மதகொண்டப்பள்ளியில் பழைய பிளாஸ்டிக், இரும்பு குடோனில் பயங்கர தீ ரூ.25 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்


மதகொண்டப்பள்ளியில் பழைய பிளாஸ்டிக், இரும்பு குடோனில் பயங்கர தீ ரூ.25 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்
x
தினத்தந்தி 19 March 2019 11:00 PM GMT (Updated: 19 March 2019 9:12 PM GMT)

மதகொண்டப்பள்ளியில் பழைய பிளாஸ்டிக், இரும்பு பொருட்கள் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள மதகொண்டப்பள்ளியைச் சேர்ந்தவர் பஷீர். இவருக்கு சொந்தமான பழைய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்கள் குடோன் ஒன்று அந்த பகுதியில் உள்ளது. இங்கு பிளாஸ்டிக் பொருட்கள், பேப்பர்கள், பேரல்கள், பழைய இரும்புகள், மர சாமான்கள் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் பஷீர் நேற்று மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றார். அப்போது அவரது பிளாஸ்டிக், இரும்பு குடோனில் இருந்து திடீரென புகை வந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் பஷீருக்கும், தேன்கனிக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்த போது குடோனில் தீப்பிடித்து மளமளவென்று எரியத்தொடங்கியது. அங்கிருந்த பிளாஸ்டிக் பீப்பாய்கள், பழைய மர சாமான்கள், அந்த பகுதியில் இருந்த கார் அனைத்தும் தீயில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தன.

இந்த தீ விபத்தால் குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த பயங்கர தீவிபத்தில் ரூ.25 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எரிந்து சேதமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story