பொள்ளாச்சி பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவ குழு அமைப்பு முன்னாள் டி.ஜி.பி. திலகவதி தகவல்


பொள்ளாச்சி பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவ குழு அமைப்பு முன்னாள் டி.ஜி.பி. திலகவதி தகவல்
x
தினத்தந்தி 19 March 2019 10:30 PM GMT (Updated: 19 March 2019 9:24 PM GMT)

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 28 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது என முன்னாள் டி.ஜி.பி. திலகவதி கூறினார்.

சென்னை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் ‘பாலியல் வன்முறைக்கு எதிரான முறையீட்டு குழு’ ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இதனுடைய ஒருங்கிணைப்பாளராக முன்னாள் டி.ஜி.பி. திலகவதி, இணை ஒருங்கிணைப்பாளராக ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த சுகந்தி, வக்கீல் ஆதிலட்சுமி லோகமூர்த்தி, அங்கயற்கண்ணி, செயல் அலுவலர் சுதா ராமலிங்கம், முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி குத்சியா காந்தி உள்ளிட்ட மருத்துவர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர், பத்திரிகையாளர் அடங்கிய 28 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த குழு தலைவரும், ஒருங்கிணைப்பாளருமான திலகவதி, சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொள்ளாச்சி உள்பட தமிழகம் முழுவதும் ஏராளமான பெண்கள், குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தி, அவர்களின் பயத்தை போக்கி, இலவச சட்ட உதவி மூலம் பாதுகாப்பும் நீதியை பெற்றுத்தருவதற்காக பல்வேறு தளங்களில் பணியாற்றி வரும் பெண்களாகிய நாங்கள் ஒன்றிணைந்து இந்த குழுவை ஏற்படுத்தி உள்ளோம். இந்த குழுவின் அலுவலகம் சென்னை, கொண்டிசெட்டி தெரு, உசேன் இல்லத்தில் செயல்படும்.

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் 24 மணி நேரமும் 99943 68566 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இது வாட்ஸ்-அப் எண் என்பதால் தகவல்களையும் அனுப்பலாம். இந்த செல்போனை குழுவை சேர்ந்த பெண் ஒருவர் கையாள்வார். எனவே பாதிக்கப்பட்ட பெண்கள் நம்பிக்கையோடு இந்த செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம். தகவல்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும். செல்போனில் பேச தயங்கினால் குழுவை சேர்ந்த உறுப்பினர்களில் யாரேனும் ஒருவரை நேரடியாக சந்திக்க வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.

இந்த வழக்கு தற்போது சி.பி.ஐ. கையில் இருப்பதால், பாதிக்கப்பட்டவர்கள் மூலம் கிடைக்கும் தகவல்களை சி.பி.ஐ. விசாரணை குழுவினரிடம் ஒப்படைத்து வழக்கை வலுப்பெற வைப்போம்.

குழுவினர் பொள்ளாச்சிக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்டவர்கள், அவர்களுடைய குடும்பத்தினர், கல்லூரி மாணவ, மாணவிகள், இயக்க செயல்பாட்டாளர்கள், மகளிர் குழுவினரை நேரில் சந்தித்து கள ஆய்வு செய்ய உள்ளோம். தமிழகத்தில் எந்த மூலையில் பெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் இலவச சட்ட உதவி மற்றும் பாதுகாப்பை பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story