நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு துணை ராணுவப்படை அணிவகுப்பு


நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு துணை ராணுவப்படை அணிவகுப்பு
x
தினத்தந்தி 20 March 2019 4:30 AM IST (Updated: 20 March 2019 2:54 AM IST)
t-max-icont-min-icon

வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை புறநகர் பகுதிகளில் வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் அமைதியான முறையில் வாக்களிக்கும் வகையில் துணை ராணுவப்படை வீரர்கள் அணிவகுப்பு நடத்தினர்.

பெரம்பூர்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் பெரம்பூர் தொகுதியும் அடங்கும். பெரம்பூர் தொகுதியில் குறிப்பிட்ட வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குசாவடிகளாக கருதப்படுகின்றன.

எனவே அங்கு வாக்காளர்களாகிய பொதுமக்கள் அமைதியான முறையில் வாக்களிக்கும் விதமாக, அவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் நேற்று துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் அணிவகுப்பு நடத்தினர்.

பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே செம்பியம் உதவி கமிஷனர் பன்னீர்செல்வம், இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் 26 துணை ராணுவ வீரர்கள் மற்றும் 50 போலீசார் பங்கேற்ற ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.

ரெயில் நிலையம் அருகில் தொடங்கி மாதவரம் நெடுஞ்சாலை, பல்லவன் சாலை, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, 70 அடி சாலை வழியாக சென்று ஜி.கே.எம்.காலனியில் பேரணி நிறைவடைந்தது. 6 கிலோமீட்டர் தூரம் சென்ற இந்த பேரணி பொதுமக்கள் இடையே அவர்களின் அச்சத்தை நீக்கும் வகையில் அமைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட பதற்றமான பகுதிகளான வியாசர்பாடி, சர்மாநகர், எம்.கே.பி. நகர் ஆகிய பகுதிகளில் எம்.கே.பி. நகர் உதவி கமிஷனர் அழகேசன் தலைமையில் போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு நடத்தினர்.

வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராயபுரம் மேம்பாலம் அருகே துணை ராணுவப்படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் தன்ராஜ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் மற்றும் ராயபுரம், காசிமேடு போலீசார், வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் கலைச்செல்வன், ராயபுரம் உதவி கமிஷனர் தினகரன் ஆகியோர் தலைமையில் அணிவகுத்து பேரணியாக சென்றனர்.

பேரணியானது ராயபுரம் தொடங்கி காசிமேடு, தண்டையார்பேட்டை வழியாக மீண்டும் ராயபுரத்தில் வந்தடைந்தது.

Next Story